Wednesday, August 24, 2005

நேர நிர்வாகம் - Time Management - Part 7

இதுவரை உடலளவிலும் மனத்தளவிலும் நம்மை எப்படி தயார் படுத்திக்கொள்வது என்பது பற்றியான கருத்துக்களை விவாதித்தோம். இந்த பதிவில் நம் அனைவருக்கும் முக்கியமான ஒன்றான நேர நிர்வாகம்' (Time Management) பற்றி பார்ப்போம்.

நேரம் தான் நம்மிடம் இருக்கும் முக்கியமான மூலதனம். அதை சரியாக நிர்வகித்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். நம்மில் பலருமே நம்முடைய சோம்பல் குணம் மற்றும் தள்ளிப்போடும் குணத்திற்கு நேரத்தைத்தான் குற்றம் சாட்டிக்கொண்டுருக்கின்றோம். நம்மில் எல்லோரும் வாழ்வில் ஒருமுறையாவது 'எனக்கு நேரமே பத்துவதில்லை' என்று அங்கலாய்த்திருப்போம்.

முதலில் நாம் நமக்கு ஒரு நாளில் எவ்வளவு நேரம் கிடைக்கிறது என்று பார்ப்போம்.

வார நாட்களில்,
தூக்கம் = 8 மணி நேரம்.
அலுவலகம் = 9 மணி நேரம்.
அலுவலகம் போய் வர பயணம் = 2 மணி நேரம்.
காலைக்கடன்கள் = 1 மணி நேரம்
காலை இரவு உணவு உண்பதற்கு = 1 மணி நேரம்.
ஆக மொத்தம் = 21 மணி நேரம்

ஆக வார நாட்களில் நமக்கு 3 மணி நேரம் கிடைக்கிறது.

வாரக்கடைசிகளில்.
தூக்கம் = 10 மணி நேரம்.
காலைக்கடன்கள் = 1 மணி நேரம்.
உணவருந்தல் = 2 மணி நேரம்.

ஆக வாரக்கடைசிகளில் மொத்தம் 9 மணி நேரம் நமக்கு கிடைக்கிறது.

நாம் பெரும்பாலும் நம் கையில் இருக்கும் இந்த முப்பது மணிக்கும் மேலான நேரத்தை சரியாக திட்டமிடாததால், தேவையில்லாத காரியங்களுக்கு உபயோகிக்கிறோம். Time is money என்று மிகச்சரியாகத்தான் சொன்னார்கள். கையில் இருக்கும் பணத்தை திட்டமிடாவிட்டால் எப்படி கரையும் என்பதே தெரியாது. அதே போல் தான் நமது நேரமும்.

நம்மில் எல்லோருக்கும கீழ்க்கண்ட பெரும்பாலானவற்றை செய்ய ஆசை.

1) தியானம்
2) உடற்பயிற்சி
3) நூலகங்களுக்கு சென்று நல்ல புத்தகங்கள் படித்தல்.
4) வாகனம், வீடு ஆகியவற்றை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளல். (இதை டைப் பண்ணும் போது தான் பார்க்கிறேன், மானிட்டர், கீ போர்டில் அவ்வளவு அழுக்கு :-( )
5) மனைவி மக்களுடன் கடற்கரை அல்லது பூங்காவிற்கு அழைத்துச்சென்று மனதை இதப்படுத்திக்கொள்ளல்.
6) உறவினர்களிடம் தொடர்பில் இருத்தல்.
7) வீட்டில் தோட்டம் இடல் அல்லது தோட்டத்தை பராமரித்தல்.
8) பகுதி நேர மேற்படிப்பு படித்தல்.

ஆனால் எவ்வளவு பேர் அவற்றை தொடர்ந்து செய்கிறோம்? பழி போடுவதற்குத்தான் இருக்கிறதே பாவம் 'நேரம்'.

சரி, நேரத்தை எப்படி நிர்வகிப்பது?

நேர நிர்வாகம் என்பது பெரிய ஒன்றும் கடினமான ஒன்றும் இல்லை. எளிதாக சொல்லுவதென்றால் பணத்தின் செலவுக்கு budget போடுவது போல் நம்மிடம் இருக்கும் நேரத்துக்கு budget போடுவது.

1) ஒவ்வொரு நாளும் அன்றைய நாளுக்காக திட்டமிடுதல்.
2) திட்டமிடுதலை, முடிந்த வரை நிறைவேற்றுதல்.
3) நிறைவேற்ற முடியாதவற்றை ஆராய்தல்.

சிலபேரை பார்த்திருப்பீர்கள் தொடர்ந்து வேலை பார்த்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் output அந்த அளவுக்கு இருக்காது. ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் 'Don't work hard. Work Smart' என்று. அதாவது கடினமாக வேலை செய்யாதே, புத்திசாலித்தனமாக வேலை செய். நேர நிர்வாகம் என்பது புத்திசாலித்தனமாக வேலை செய்ய உதவும் ஒரு கருவி.

சில பேர் நான் ஒரு palm top வாங்க வேண்டும் அதன் பிறகு தான் என்னுடைய வேலைகளை நிர்வகிக்க வேண்டும் என்று இதைத்தள்ளிப்போட்டுக்கொண்டே போவதை பார்த்திருக்கிறேன். அது போன்ற உபகரணங்கள் எல்லாம் தேவையே இல்லை. visiting card- அளவுக்கு இருக்கக்கூடிய ஒரு காகிதம் இருந்தாலே போதும். அதிலிருந்து ஆரம்பிக்கலாம். அல்லது ஒரு டயரி இருந்தால் போதும். எப்போதும் கணினியின் முன்னால் இருப்பவர்கள் outlook அல்லது yahoo போன்றவை கொடுக்கும் வசதிகளை பயன்படுத்தலாம்.

இன்னும் எளிதாக்குவதற்கு நேர நிர்வாகத்தை நாம் இரண்டாக பிரித்துக்கொள்ளலாம்.

1) அலுவலக நேர நிர்வாகம்
2) வீட்டு நேர நிர்வாகம்.

- வீட்டு வேலைகளை முந்தைய நாள் படுக்கப்போகும் முன்பு திட்டமிடுதல் நல்லது.
- அதே போல் முதலில் ஆரம்பிக்கும்போது எளிதான சாதிக்கக்கூடிய அளவிற்கு திட்டமிடலாம்.
- அதே போல் அலுவலகத்திலும் அன்றைய வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பே திட்டமிடுதல் மிகவும் பயனுள்ளது.
- ஒவ்வொரு வேலையையும் முடித்தவுடன் அதை அடித்து விடலாம் அது அடுத்த வேலையை செய்வதற்கான உற்சாகத்தைக்கொடுக்கும்.
- அலுவலகத்தில் அந்த நாளின் முடிவில் எவ்வளவு திட்டமிட்டோம் எவ்வளவும் முடித்திருக்கிறோம் என்று சரி பார்த்துக்கொள்வது நல்லது. அதே போல் இரவு
படுக்கப்போகும் முன் இதை அலசுதல் நல்லது. இது நமது திட்டமிடும் திறனை வளர்க்கும்.
- நிறைவேற்ற முடியாதவற்றை பற்றி அலசுதல், அதை நிறைவேற்ற என்னவெல்லாம் தேவைபடுகிறது என்று திட்டமிடுதல் மிகவும் அவசியம்.

மேலே சொல்லியவை ஒரு எளிய ஆரம்பத்திற்கான வழி முறைகள். ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாமே?

8 Comments:

Anonymous Anonymous said...

துணி துவைக்கணும், இஸ்த்திரி போடணும், ஒட்டடை அடிக்கணும், கார் வாஷ் பண்ணனும், கேஸ் போடணும், வூட்டுக்கு வாராந்திர போன் அடிக்கணும், அப்படியே ஒரு டாவு இருந்தா அத்தயும் 'கன்டுக்கணும்', முக்கியமா வார நாள்ல சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் என்ன சமைக்கிறதுன்னு 'யோசிக்கணும்', அப்புறம் சமைக்கணும்.......

ஒரு அயல் தேசத்திலிருக்கும் ப்ரம்மச்சாரியோட கஷ்டம் யாருக்கு புரியுது??

அண்ணாச்சி வீட்டுல சிதம்பரமோ???

August 25, 2005 5:15 am  
Anonymous Anonymous said...

அட, இத வுட்டுட்டேனே, வலைப்பதிவுகளில் இத்துப்போன சண்டைகளைப் படிக்கணும், வெத்து பின்னூட்டமிடணும், அப்பப்போ ஒத்து ஊதணும்....

August 25, 2005 5:32 am  
Blogger Kannan said...

சுரேஷ்,

உங்களின் பதிவுகளைப் படித்தேன். படிப்பதற்கு புத்துணர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது.

நல்ல முயற்சி. தொடர்ந்து இம்மாதிரி பதியுங்கள்.

August 25, 2005 7:38 am  
Blogger Suresh said...

அனானிமஸ்,

சரியா சொன்னீங்க....

கண்ணன்,

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

August 25, 2005 8:29 am  
Blogger Muthu said...

///அப்படியே ஒரு டாவு இருந்தா அத்தயும் 'கன்டுக்கணும்', முக்கியமா வார நாள்ல சாயந்திரம் வீட்டுக்கு வந்ததும் என்ன சமைக்கிறதுன்னு 'யோசிக்கணும்', அப்புறம் சமைக்கணும்.......

ஒரு அயல் தேசத்திலிருக்கும் ப்ரம்மச்சாரியோட கஷ்டம் யாருக்கு புரியுது??//

:-) :-)
கஷ்டம் வருங்கால் நகுக.

August 27, 2005 5:02 pm  
Blogger சேகு said...

நல்ல அருமையான பதிவுகள்.தொடருங்கள்...

August 27, 2005 7:43 pm  
Blogger வீ. எம் said...

//காலைக்கடன்கள் = 1 மணி நேரம்//

1 மணி நேரமா?? ரொம்ப கடன்பட்ட மாதிரி இருக்கு :)
நல்ல பதிவு சுரேஷ்
என் time management கார்ட்டூண் பார்த்திருக்கீங்களா? என் வலைப்பூ வாங்க "என் புது முயற்சி" என்ற தலைப்பில் இருக்கும் பாருங்க
வீ எம்

August 29, 2005 2:14 pm  
Anonymous Anonymous said...

நல்ல பதிவு!!
தமிழர்களின் தலையாய கடமை, T V சீரியல்களில் வார நாட்களில் 3 மணி நேரமும், வாரக் கடைசிகளில் 5 அல்லது 6 மணி நேரம் போய்விடுகிறதே!! :)

சரவ்.

September 06, 2005 7:16 pm  

Post a Comment

<< Home