Monday, October 17, 2005

சிறுவயது விளையாட்டுக்கள்.

இப்போதுள்ள சிறுவர்களுக்கு விளையாடக்கிடைக்கும் X-BOX, Playstation, GameBoy இவற்றையெல்லாம் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த நவீன விளையாட்டு சாதனங்களை இந்தத் தலைமுறை சிறுவர்கள் கையாளும் லாவகம் பிரமிக்க வைக்கிறது. அதே போல் நமது சிறுவயதில் நமக்கு நமது சிறு வயதில் என்ன விளையாடக்கிடைத்தது என்றும் ஆதங்கப்படவும் வைக்கிறது.

கொஞ்சம் நினைவுகளை பின்னோக்கி சுழல விட்டுப்பார்த்தால் எனக்கு விவரம் தெரிந்து விளையாடிய விளையாட்டுகள்...

முதலில் நினைவுக்கு வருவது ஒளிந்து பிடித்து விளையாடுதல். இதற்கு 'சாட் பூட் த்ரீ' என்று சொல்லி ஓவ்வொருவராக விலக்கிவிட்டு கடைசியில் யார் இருக்கிறார்களோ அவர்கள் ஒன்றிலிருந்து பத்துவரை கண்ணை மூடிக்கொண்டு எண்ணவேண்டும். அதற்குள் மற்றவர்கள் ஒளிந்து கொள்ளவேண்டும். பின்பு ஒளிந்து கொண்டவர்களை ஒவ்வொருவராக கண்டு பிடிக்க வேண்டும். ஒளிந்திருப்பவரை ஒவ்வொருவராக கண்டு பிடித்தவுடன் 'ஒன்னீஸ்' 'ரெண்டீஸ்' :-) என்று சொல்லுவார்கள். இந்த விளையாட்டின் பெயரே ஒன்னீஸ் ரெண்டீஸ் என்று சொல்லுவது உண்டு. அனைவரும் கண்டு பிடிக்கப்பட்ட பின் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டவர் பின்பு தொடர வேண்டும். இப்படி போய்கொண்டே இருக்கும்

ஆண்களுக்கு பம்பர விளையாட்டு மிகவும் பிரசித்தமானது, 1,2,3 சொல்லிவிட்டு எல்லோரும் ஒரே சமயத்தில் பம்பரத்தை சுழலவிட்டுவிட்டு சாட்டையால் சுற்றி கையில் எடுக்க வேண்டும். யார் கடைசில் எடுக்கிறார்களோ அவர்களது பம்பரத்தை மண் தரையில் ஒரு வட்டம் போட்டுவிட்டு அதன் உள்ளே இடுவார்கள். அப்புறம் ஒவ்வொருவராக பம்பரத்தை வேகமாக சுழற்றி முதலில் அந்த வட்டத்துக்குள் குத்துமாறு சுழலவிடவேண்டும். வட்டத்துக்குள் குத்தாவிட்டால் அவரது பம்பரமும் வட்டத்துக்குள் வைக்கப்படும். இது ஒரு சுவாரசியமான ஆட்டம். ஆட்டத்தின் முடிவில் தோற்பவரின் பம்பரத்தின் மேல் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஒரு 'ஆக்கர்'(பம்பரத்தின் மேல் ஆணியை வைத்து புள்ளி விழுமாறு ஓங்கி அடிப்பார்கள்) வைப்பார்கள். சில சமயங்களில் பம்பரம் உடைவது கூட உண்டு. சிலசமயம் பெண்களை கவர, பம்பரத்தை சுழற்றி தரையில் படாமலே கையில் எடுப்பதுவும் உண்டு.

கோலி விளையாட்டு பல விதங்களில் விளையாடப்படும். சுவற்றின் ஓரத்தில் ஒரு சதுரமாக ஒரு கோடு போட்டுவிட்டு அதற்குள் சில கோலிகளை உருட்டுவார்கள். அதற்குப்பிறகு எதிராளி சொல்லும் கோலியை எறிந்து அடிக்க வேண்டும். இதற்கு சிகரெட் அட்டை, கோலி குண்டு இவற்றை பணயமாக வைத்து ஆடுவது உண்டு. கோலிகுண்டு சிலசமயம் சிலர் பணம் வைத்து ஆடுவதால், வீட்டார்கள் அதை பெரும்பாலும் விளையாட அனுமதிப்பதில்லை.

கிட்டிப்புல்(கில்லி) எங்கள் பகுதிகளில் மிகவும் பிரபலமான ஆட்டம். ஆனால் பல இடங்களில் இதை விளையாடவிட மாட்டார்கள். எனக்கு தெரிந்து நிறைய பேருக்கு கில்லி விளையாட்டால் காயம் ஏற்பட்டிருக்கிறது. ஆட்டம் மிகவும் சுவாரசியமானது. தரையில் நீளவாக்கில் தோண்டிவிட்டு கிட்டிப்புல்லை அதற்கு குறுக்கில் வைக்க வேண்டும், பிறகு கையில் இருக்கும் கோலால் , கிட்டிப்புல்லை வேகமாக அழுத்தம் கொடுத்து நெம்பித் தள்ள வேண்டும். எதிராளிகள் அந்தப்புறம் நின்று கொண்டு இருப்பார்கள். அவர்கள் இதை கீழே விழாமல் பிடித்துவிட்டால் நீங்கள் அவுட்.. பின்பு அவர்கள் முறை. பிடிக்காமல் தூரத்தில் போய் விழுந்தால், நீங்கள் கோலை குறுக்காக வைக்கவேண்டும் .பின்பு அவர்கள் கிட்டிபுல்லை தூக்கி குறி பார்த்து எறிந்து அது கோலில் பட்டால் நீங்கள் அவுட். அவர்கள் எறியும் போது அது கோலில் படாமல் தூரத்தில் போய் விழுந்தால் நீங்கள் ஆட்டத்தை தொடரலாம்.

ஆட்டம் எப்படியென்றால், நீங்கள் கிட்டிப்புல்லின் சீவியிருக்கும் ஒரு முனையில் அடிக்க வேண்டும், அது எம்பி வரும்போது அதை கோலால் எத்தனை முறை தட்ட முடியுமோ அவ்வளவு புள்ளிகள். அப்படி தட்டிக்கொண்டே குழியிலிருந்து எவ்வளவு தூரம் கொண்டு செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் கொண்டு செல்ல வேண்டும். ஒரு முறை கூட தட்ட முடியாவிட்டால் அங்கிருந்து குழி இருக்கும் தூரத்தை கையிலிருக்கும் கோலால் அளக்க வேண்டும் எவ்வளவு தூரம் இருக்கிறதோ அவ்வளவு புள்ளிகள். இப்படியே நீங்கள் அவுட் ஆகும் வரை ஆட்டம் தொடரும். ஒரு தெருவில் ஆடும் ஆட்டம் அப்படியே பக்கத்து தெருவிற்கும் போவது உண்டு.

பள்ளியில் இடைவேளைகளில், சோளத்தட்டையால் எறி பந்து விளையாடுவது உண்டு. வகுப்பறையில் போரடித்தால் ரஃப் நோட்டுப்புத்தகத்தில் கட்டம் போட்டு விளையாடுதல் ரொம்ப பிரபலம். அதே போல் நீளமான குச்சியை வைத்துக்கொண்டே விளையாடும் கரண்ட் ஷாக், புளியங்கொட்டையை ஒரு வட்டத்திற்குள் கொட்டிவிட்டு அதை தட்டையான கல்லால் செதுக்கி வெளியே கொண்டு வந்து விளையாடும் 'செதுக்கு சில்' ரொம்ப பிரபலம். அதே போல் ஊருக்கு ஒதுக்குப்புறத்திற்கு சென்று மாஞ்சா தடவி பட்டம் விடுதல் ரொம்ப பிரபலம்.

பெண்களெல்லாம் கண்கட்டு விளையாட்டு, பரமபதம், நொண்டி , சொட்டாங்கல்( இது மிகவும் பிரபலமான விளையாட்டு), பல்லாங்குழி இவையெல்லாம் விளையாடுவது உண்டு. நல்ல மணல் விளையாடக்கிடைத்தால் மணலை நீளவாக்கில் குவித்துவிட்டு எதிரெதிராக உட்கார்ந்து கொண்டு சிறு கல்லை அதற்குள் ஒளித்து வைத்து எதிரில் இருப்பவர் அது எங்கிருக்கிறது என்பதி அனுமானித்து அதன் மேல் இருகைகளை வைத்து மூடவேண்டும். சரியாக கணித்தால் பின்பு அடுத்தவர் முறை. இந்த விளையாட்டின் பெயர் மறந்துவிட்டது.

அதற்குப்பிறகு தூர்தர்ஷன் புண்ணியத்தில் கிரிக்கெட் பிரபலமான பின்பு பெருப்பாலானோர் அதற்கு தாவி விட்டனர். அந்தந்த தெருவில் உள்ள சிறுவர்கள் அனைவரும் இனைந்து ஒரு டீம் ஆரம்பித்து எல்லோரும் பணம் போட்டு கிரிக்கெட் விளையாட்டுக்கு தேவையான் பொருள்கள் வாங்கி பக்கத்து தெருவில் இருக்கும் டீமுடன் போட்டிக்கு போவது உண்டு. சிலசமயம் பெரிய டோர்னமென்ட் எல்லாம் நடத்துவது உண்டு. முதல் பரிசு இரண்டாம் பரிசு எல்லாம் அந்த வட்டாரத்தில் இருக்கும் எம்.எல்.ஏ அல்லது கவுன்சிலர் கொடுப்பார். அதற்கு கைமாறாக சுவரொட்டி அடித்து பரிசு உபயம் என்று அவர்கள் பெயரை வெளியிடுவது உண்டு. கிரிக்கெட் விளையாடும்போது எவ்வளவோ கண்ணாடிகளை உடைத்திருக்கிறோம். கார்க் பந்தில் கால் தடுப்பு கூட இல்லாமல் வேகப்பந்து வீச்சை தைரியமாக எதிர்கொள்ளும் தைரியத்தை இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

அப்போதெல்லாம் மதுரை மருத்துவக்கல்லூரி மைதானத்துக்கு விடுமுறை நாளில் போகும்போது குறுக்கும் நெறுக்குமாக எத்தனையோ குழுக்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருக்கும். கிரிக்கெட் மைதானத்துக்கு அவ்வளவு பஞ்சம். மைதானங்களின் பஞ்சத்தால் குறுகலான தெருக்களில் ரப்பர்
பந்துகளில் ஒன் பிட்ச் கிரிக்கெட் ஆடுவது பிரபலமாகிவிட்டது. கிரிக்கெட் பிரபலனானதால் அழிந்து போன சிறுவயது விளையாட்டுக்கள் எவ்வளவோ.

மேலே சொல்லாமல் விடுபட்டுப்போன எவ்வளவோ விளையாட்டுக்கள் இருக்கின்றன. இப்போது இருக்கும் சிறுவர்களுக்கு இவைபற்றியெல்லாம் எந்த அளவுக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. கிராமங்களில் இவை இன்னும் உயிருடன் இருக்கின்றன என்று நம்புகிறேன். ஆனால் ஒன்று மட்டும் உண்மை இதை பற்றி எழுதும்போதே மனதுக்குள் மெல்லிதான ஒரு ஆனந்தம் பரவுவதை உணர முடிகிறது...

22 Comments:

Blogger துளசி கோபால் said...

சுரேஷ்,

கொசுவத்தி வாங்க வச்சுட்டீங்க.

நான் ஒருகாலத்துலே 'கில்லி' எக்ஸ்பர்ட்.கில்லிதண்டாதான் கிட்டிப்புள்

பொம்பளைப்புள்ளே விளையாட்டா அதுன்னு ஏகப்பட்ட திட்டு கிடைக்கும். அதுக்கெல்லாம் அசர்ற ஆளா நான்?

October 18, 2005 5:42 am  
Anonymous Anonymous said...

சுரேஷ்,

நல்ல பதிவு. முன்பு பம்பரம் விளையாட்டை வைத்து வின்னி என்று ஒரு சிறுகதை எழுதினேன்.
( http://www.desikan.com/blogcms/?item=20&category=shortstories ).
நேரம் இருந்தால் படித்து பாருங்கள்.

October 18, 2005 5:53 am  
Anonymous Anonymous said...

a good blog about our childhood

Senthil Kumar, Pondicherry

October 18, 2005 8:08 am  
Blogger அன்பு said...

சுரேஷ் சின்னவயது ஞாபகத்தைக்கிளறி விட்டுவிட்டீர்கள்... மிக்க நன்றி.

பி.கு:
மேலே டோண்டு சார் பேரில் எழுதப்பட்ட பின்னூட்டம் ஒரிஜினல் அல்ல, சந்தேகமே வேண்டாம்!

October 18, 2005 10:14 am  
Blogger dondu(#11168674346665545885) said...

அன்பு அவர்களுக்கு முதற்கண் என் நன்றி. சுரேஷ் அவர்களே உங்கள் பதிவில் போட்டோ எனேப்ள் செய்யப்பட்டிருந்தால் இப்பின்னூட்டத்தில் என் புகைப்படம் வரும். இப்போது நான் ப்ளாக்கராகப் பதிவு செய்கிறேன். மேலே உள்ள போலி டோண்டு "அதர்" ஆப்ஷனை உபயோகித்து பின்னூட்டமிட்டுள்ளான். அவனது பின்னூட்டத்தில் என் புகைப்படம் வராது. அதே சமயம் நீங்கள் ப்ளாக்கர் கணக்கை மட்டும் அனுமதிக்கும் பட்சத்தில் என் பெயரை டிஸ்ப்ளே பெயராக வைத்து என் புகைபடத்துடன் ஒரு அக்கௌண்ட் வைத்துள்ளான். அதன் பெயரில் பின்னூட்டமிடுவான். ஆனால் டோண்டு பெயர் மீது எலிக்குட்டியை வைத்துப் பார்த்தால் அவன் உண்மையான ப்ளாக்கர் எண் தெரியும். என்னுடைய எண் 4800161. அவ்வளவுதான் விஷயம். இது பற்றி நான் ஏற்கனவே பதிவு போட்டிருக்கிறேன், பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
இந்த கீர்த்தி மிகுந்த மனிதன் அடங்குவதாகத் தெரியவில்லை.

இப்போது பழையகால விளையாட்டுகளுக்கு வருவோம்.
"நல்ல மணல் விளையாடக்கிடைத்தால் மணலை நீளவாக்கில் குவித்துவிட்டு எதிரெதிராக உட்கார்ந்து கொண்டு சிறு கல்லை அதற்குள் ஒளித்து வைத்து எதிரில் இருப்பவர் அது எங்கிருக்கிறது என்பதி அனுமானித்து அதன் மேல் இருகைகளை வைத்து மூடவேண்டும். சரியாக கணித்தால் பின்பு அடுத்தவர் முறை. இந்த விளையாட்டின் பெயர் மறந்துவிட்டது." இவ்விளையாட்டின் பெயர் "கிச்சுக்கிச்சு தாம்பாளம்". இப்போது கூட வடசென்னையில் கோலி, பம்பரம், பாண்டி முதலிய விளையாட்டுகள் ஆடப்பட்டு வருகின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

October 18, 2005 11:02 am  
Blogger dondu(#11168674346665545885) said...

இன்னொரு விஷயம் கூற மறந்து விட்டேன். மற்றப் பதிவுகளில் நான் இடும் பின்னூட்டங்கள் நான் மேலே குறிப்பிட்டுள்ள என் பதிவிலும் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்

October 18, 2005 11:06 am  
Blogger Suresh said...

ராஜ், துளசி அக்கா, தேசிகன், செந்தில் குமார், அன்பு, டொண்டு சார் உங்கள் அனைவருக்கும் நன்றி.

சுட்டிக்கு நன்றி தேசிகன்..

துளசி அக்கா இப்படியெல்லாம் கூட திறமை இருக்கிறதா?.. இருங்கள் வீ.எம்-ற்கு தெரிவிக்கிறேன்.. அவர் இது பற்றி தனி பதிவு போடுவார் :-)

டொண்டு சார்.. பின்னூட்டத்திற்கு நன்றி. மேலே உங்கள் போல் யாரோ எழுதிய பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்.

October 18, 2005 12:00 pm  
Blogger ramachandranusha(உஷா) said...

சுரேஷ், வேறு ஒருவர் கூட எழுதியிருந்தார். பெயர் ஞாபகமில்லை. ஆனால் சின்ன வயசு கதை எவ்வளவு பேர் எழுதினாலும் இனிக்கதானே செய்யும்?
நாங்கள் நொண்டி, பாண்டி, ஓடிப்பிடித்தல், ஹெல்ப், கண்ணாம்மூஞ்சி, ஒரு குடம் தண்ணிவிட்டு---ம்ம்ம் இன்னும் என்ன? இதையெல்லாம் விளையாடுவோம்.
உட்கார்ந்து விளையாடுவது என்பது கோடை விடுமுறையில் மத்தியான வேளையில் கேரம், பல்லாங்குழி, புளியங்கொட்டை, சோழி, தாயக்கட்டை, டிரேட் இத்தியாதிகள் ஆண், பெண் வித்தியாசமில்லாமல் விளையாடுவோம். வெய்யில் கொளுத்தும். வெளியே விடமாட்டார்கள்.
அது என்ன ஆம்பள பிள்ளைகளுக்கு விளையாட்டு பட்டம், கோலிகுண்டு இத்தியாதிகள் சீசன் மாறிக் கொண்டே வரும்?

October 18, 2005 1:29 pm  
Anonymous Anonymous said...

NGABAGAM VARUTHE! NGABAGAM VARUTHE!POKKISAMAAKA NENGINILL PUTHAINTHA NINAIVUKAL ELLAAM NGABAGAM VARUTHE!

October 18, 2005 2:30 pm  
Anonymous Anonymous said...

நல்லா ரீவைண்ட் பன்றீங்க சுரேஷ்.. ஒரு நாள் Dஏஸீ , மற்றொரு நாள் அப்படியே சின்ன வயசு விளையாட்டுக்கு போய்டீங்க :-)

மதுரை மெடிக்கல் காலேஜ் கிரவுண்ட் மாதிரி, நம்ம மாரியம்மன் கோவில் தெப்பகுளம் கிரவுண்ட் நியாபகம் இருக்கா (நீங்க மருதையா ??)

ஹீம்.... பச்சகுதிர விளையாட்டை விட்டுடீங்க.. முதல்ல ஒருத்தர் தரையிலே கால் நீட்டி உட்காந்து அவரை எல்லோரும் தாண்டனும்.. அப்புறம், ஒரு கையை வப்பார், அதையும் தாண்டீட்டா ரெண்டு கையையும் வப்பார், அப்புறம் எழுத்து குனிஞ்சு நிக்கையிலே தாண்டனும், அப்படியே கொஞ்சம் கொஞ்சமா தாண்டனும்.. எப்பயாவது தாண்டையிலே இடிச்சிட்டா.. அப்புறம் இடிச்சவங்க உட்காற.. அப்படியே வெளையாட்டு தொடரும்..

இந்த "சாட்,பூட்,திரீ..... , ஒன்னீஸ், ரெண்டீஸ்..", இதெல்லாம் படிக்கிறதுக்கே நல்லா இருக்கு :-) எங்க தெருவிலே, சும்மா 20/25 பசங்க,பொண்ணுங்கனு வித்தியாசம் இல்லாம, தெருவிலே இருக்குற யார் வீட்டுல வேணாலும் போய் ஒளிஞ்சுக்கலாம்னு ஒரு சுதந்திரம் வேற.. ஹய்யோ.. சூப்பர் டைம் அது.. இப்போலாம் அவுங்கலாம் எங்க இருக்காங்கலோ

பி.கு: ஆனாலும் ஆண்டறிக்கை வாசிக்கிற மாதிரி இருந்துச்சு இந்த பதிவு.. ஏன் ? என்னாச்சு ?

October 18, 2005 2:40 pm  
Blogger Suresh said...

ஹமீதாப்துல்லா,

பாடலை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி..

செந்தில்,

நான் மருதைதான்.... தெப்பக்குளம் தெரியுமான்னு கேட்டுட்டீங்களே... படிச்சது தெப்பக்குளத்துக்கு அந்தப்புறம் உள்ள தியாகராஜர் மாடல் பள்ளியில், , அண்ணா நகரில் இருந்து வைகை ஆற்றை கடந்து தெப்பக்குளத்தில் ஒரு புறத்தில் இறங்கி அடுத்த படியில் ஏறித்தான் பள்ளிக்குப்போக வேண்டும்..

பச்சக்குதிரை விளையாட்டு ஞாபகம் வந்தது நினைவுபடுத்தியவுடன்.. நன்றி செந்தில்..

>>பி.கு: ஆனாலும் ஆண்டறிக்கை வாசிக்கிற மாதிரி இருந்துச்சு இந்த பதிவு.. ஏன் ? என்னாச்சு ? >>

கொஞ்சம் படபடப்பு தான் செந்தில்... பின்னூட்டத்திற்கு நன்றி..(நீங்க மதுரையா?)

October 18, 2005 3:00 pm  
Blogger ramachandranusha(உஷா) said...

//இந்த "சாட்,பூட்,திரீ..... , ஒன்னீஸ், ரெண்டீஸ்..", இதெல்லாம் படிக்கிறதுக்கே நல்லா இருக்கு :-) எங்க தெருவிலே, சும்மா 20/25 பசங்க,பொண்ணுங்கனு வித்தியாசம் இல்லாம, தெருவிலே இருக்குற யார் வீட்டுல வேணாலும் போய் ஒளிஞ்சுக்கலாம்னு ஒரு சுதந்திரம் வேற.. ஹய்யோ.. சூப்பர் டைம் அது.. இப்போலாம் அவுங்கலாம் எங்க இருக்காங்கலோ//

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே! பொக்கிஷமாக நெஞ்சுக்குள் வைத்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே!

October 18, 2005 3:08 pm  
Blogger Suresh said...

உஷா,

>>> நொண்டி, பாண்டி, ஓடிப்பிடித்தல், ஹெல்ப், கண்ணாம்மூஞ்சி, ஒரு குடம் தண்ணிவிட்டு...,கேரம், பல்லாங்குழி, புளியங்கொட்டை, சோழி, தாயக்கட்டை >>>

விட்டுப்போன பல விளையாட்டுக்களை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி... முக்கியமாக 'ஒரு குடம் தண்ணிவிட்டு ஒரு பூ பூத்தது'... :-)

October 18, 2005 3:13 pm  
Blogger பத்மா அர்விந்த் said...

சுரேஷ்
உங்கள் பதிவையும் பின்னூட்டத்தையும் படிக்கும் போது ஆசையாக இருக்கிறது. நான் இதெல்லாம் விளையாடியது இல்லை. பள்லியில் PT போதும் ஆசிரியைகள் கண்காணிப்பில் சில வரைமுறைகளுடன் கூடிய விளையாட்டுக்கள் மட்டுமே விளையாடியிருக்கிறேன். கல்லூரியில் ஹாஸ்டலில் இருக்கும் போது கேரம், செஸ் மற்றும் ஸ்னூக்கர் விளையாடி இருக்கிறேன்.

October 18, 2005 6:35 pm  
Blogger Suresh said...

பகிர்தலுக்கு நன்றி பத்மா..

October 18, 2005 7:27 pm  
Blogger பிரதீப் said...

அருமையான பதிவு சுரேஷ்.
என் நினைவுகளையும் பின்னோக்கித் தரதரவென்று இழுத்துச் சென்றது உங்கள் பதிவு.
கிட்டியோடு கிரிக்கெட்டும் எங்கள் பேவரைட்.
ஆனால் இது எல்லாத்தையும் விட சீட்டி என்ற விளையாட்டுதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எல்லாரும் சிகரெட் அட்டைகள் சேர்ப்பார்கள். இன்றைய ஐரோப்பிய யூரோ தயாரித்தவர்கள் கூட அவ்வளவு யோசித்திருக்க மாட்டார்கள். அந்த மாதிரி ஒரு கோல்ட் பிளேக் கிங்சுக்கு 3 பெர்க்கிலி அல்லது 6 சிசர்ஸ் சாதா என்ற ரேஞ்சுக்கு இருக்கும். அதை ஒரு சைசாக மடித்து வைத்துக் கொள்ள வேண்டும். தெருவில் கிடக்கும் மார்பிள் அல்லது செதுக்கப்பட்ட செங்கல்கள்தான் சில்லு!

எல்லோரும் அவரவர் கையில் இருக்கும் அட்டைகளில் சரியான கரன்ஸி அளவு வட்டத்துக்குள் வைத்து சில்லால் அடிக்க வேண்டும். அவ்வளவுதான் ஆட்டம்... ஆனால் இதற்குள் நடக்கும் அரசியல் இருக்கிறதே, இன்றைய திருமாவும் மருத்துவரும் தோற்றார்கள் போங்கள்...

அன்புடன்,
பிரதீப்

October 19, 2005 4:25 pm  
Blogger Suresh said...

வாங்க ப்ரதீப்,

சீட்டி விளையாட்டை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி... நானும் அந்த விளையாட்டை விளையாடியிருக்கிறேன்.

>>>இதற்குள் நடக்கும் அரசியல் இருக்கிறதே, இன்றைய திருமாவும் மருத்துவரும் தோற்றார்கள் போங்கள்...>>

:-))

October 19, 2005 5:10 pm  
Blogger தருமி said...

adap paavi manusha!
you have 'stolen'away a topic i had in mind!!
"கொஞ்சம் படபடப்பு தான் செந்தில்... பின்னூட்டத்திற்கு நன்றி..(நீங்க மதுரையா?) - " -enna sollunga...nalla "OOr-paasam"..!

October 20, 2005 7:01 am  
Blogger தருமி said...

But, all said and done, there is ONLY ONE PERSON reigning supreme - sitting downright at Madurai and blogging!! that guy is simply..........(fill up the blank As You Like It!)

October 20, 2005 7:03 am  
Blogger Suresh said...

தருமி,

>>adap paavi manusha!
you have 'stolen'away a topic i had in mind!!>>

ஊர்க்காரங்றதால கொஞ்சம் மன்னிச்சு விட்டுடுங்க சார்...

sitting downright at Madurai and blogging!! that guy is simply தருமி

October 20, 2005 9:50 pm  
Blogger தருமி said...

the fill-up the blank should be an 'adjective' and not a'noun'!!

October 21, 2005 6:28 am  
Blogger Paavai said...

kabaddi, cycle tyre uruttikonde povadhu, kallangai - theruvil kottikidakkum jallilendu round kal porukki aduvathu, seven stones - ezhangal ...

November 11, 2005 4:58 pm  

Post a Comment

<< Home