Monday, August 01, 2005

ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி அனுபவம்

முதன் முறையாக லண்டனில் ஒரு இசை நிகழ்ச்சி பார்க்கப்போகிறோம் அதுவும் ஏஆர் ரஹ்மானின் நிகழ்ச்சி என்ற பரவசம் வாரக்கடைசியிலேயே
ஆரம்பித்துவிட்டது. மான்செஸ்டரிலிருந்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக என் டாக்டர் நண்பர்கள் வேறு வந்திருந்தார்கள். ஒரு வழியாக வீட்டிலிருந்து கிழம்பி, நேராக சரவண பவனில் சூடாக இட்லி, தோசை, வடை முடித்துவிட்டு சரியாக ஏழு மணிக்கு அரங்கத்தின் உள்ளே இருந்தோம்.

போனவுடன் முதல் ஆச்சரியம்..., வெம்ப்ளி அரினாவின் பிரம்மாண்டம்.அரங்கத்தின் பின்னாலிருந்து பார்ப்பவர்களுக்கு என்ன தெரியும் என்று ஆச்சரியமாக இருந்தது. அரங்கத்தின் உள்ளேயே பைனாக்குலர் வாடகைக்கு கொடுக்கிறார்கள். பின்னாலிருந்து பார்ப்பவர்களுக்காக பிரம்மாண்டமான திரை வைத்திருக்கிறார்கள். அரங்கம் முழுதும் நிரம்பி இருந்தது ( அரங்கத்தின் கொள்ளளவு 11500 பேர்).கூடவே ஏமாற்றமும்..., முப்பரிமாண நிகழ்ச்சிக்காக மும்பையிலிருந்து வரவேண்டிய உபகரணங்கள் வராத காரணத்தால் நிகழ்ச்சிக்கு முப்பரிமாண கண்ணாடிகள் வழங்கப்படவில்லை. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் இதற்காக வருத்தம் தெரிவித்து ஒரு கடிதம் கொடுத்தார்கள். மும்பை மழை,வெள்ளத்தை காரணமாக சொன்னதால் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.


வந்திருந்தவர்களில் வட இந்தியர்கள், தென்னிந்தியர்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் சம அளவில் இருந்தனர். வேறு எந்த நிகழ்ச்சிக்கும் இப்படிப்பட்ட ஒரு mix-ஐ பார்க்க முடியாது. ஏ ஆர் ரகுமானுக்கு இதற்காக நன்றி சொல்ல வேண்டும். என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் பிரான்சு நாட்டிலிருந்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக வந்திருந்தார்கள்.

ஏழு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்ச்சி, ஏழரை மணிக்கு ஆரம்பித்தது. ஏ ஆர் ரஹ்மான் அட்டகாசமாக அறிமுகப்படுத்தப்பட்டார். எப்போதும் கூச்ச சுபாவத்துடன் இருக்கும் ரஹ்மான் இப்போதெல்லாம் நிகழ்ச்சிகளில் நன்றாக பேச ஆரம்பித்து விட்டார். முதல் நான்கு பாடல்கள் அனைத்தும் இந்திப்பாடல்கள் அதுவும் ரஹ்மானின் புதிய இந்திப்பாடல்கள். அதுவும் நாங்கள் ஒருமுறையும் கேட்டிறாத இந்திப்பாடல்கள். அடடா !! ரஹ்மான் கவுத்துட்டார்-னு கவலையோடு உட்கார்ந்திருந்தோம். அப்புறம் வந்தார்கள் ஹரிஹரனும், சங்கர் மகாதேவனும். மாறி மாறி தமிழ்ப்பாடல்கள் வந்தன. ஒவ்வொரு முறை தமிழ் பாடல்கள் பாடியபோதும் அரங்கமே அதிர்ந்தது. 'அரபிக்கடலோரம்' பாட்டு வந்தபோது அரங்கத்திலிருந்த அனைவரும் எழுந்து ஆட ஆரம்பித்துவிட்டனர். பாம்பே தீம் புல்லாங்குழல் பாட்டு வந்த போது அனுபவித்து ரசித்தது. ட்ரம்ஸ் சிவமணி தனி ஆவர்த்தனத்தின் போது அனைவரையும் ஆட வைத்தார். 3 மணி நேரம் எப்படித்தான் போனது என்றே தெரியவில்லை. கடைசியாக வந்தே மாதரம் பாட்டு ரஹ்மான் பாடியபோது ஒட்டுமொத்த அரங்கமும் சேர்ந்து பாடியது மெய்சிலிர்க்க வைத்தது. மொத்தத்தில் மறக்க முடியாத மூன்று மணி நேரங்கள்.

11 comments:

Boston Bala said...

Thx for the coverage :-)

Suresh babu said...

Thanks Bala...

Boston Bala said...

இன்னும் கொஞ்சம் விரிவாக ஒரு எக்ஸ்டென்ஷன் பதிவு இடுங்களேன்...

என்ன தமிழ்ப் பாடல்கள் இடம்பெற்றது?
யார் பாடினார்கள்?
மேடையில் நடனம் இருந்ததா?
தமிழ்ப் பாடல்களின் போது மற்ற மாநிலத்தவர்களின் ஈடுபாடு?
'மங்கள் பான்டே' பாடினாரா... எப்படி இருந்தது!

படுத்துவதற்கு மன்னிக்கவும். அடுத்த வருடம் நியு யார்க் வந்தால் செல்வதற்கு முன்னோட்டமாக இருக்குமே என்னும் பேராசைதான் :-)

அட்வான்ஸ் நன்றிகள்

Suresh babu said...

>>என்ன தமிழ்ப் பாடல்கள் இடம்பெற்றது? யார் பாடினார்கள்?

பாடிய தமிழ் பாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

1) என்ன சொல்ல போகிறாய்- சங்கர் மகாதேவன்
2) பச்சை நிறமே - ஹரிஹரன்
3) வெண்ணிலவே -ஹரிஹரன்
4) இனிவரும் ஒன் ஓ க்ளாக் -(நியூ) -ப்ளேஸ்
5) பாபா தீம் பாட்டு.-ப்ளேஸ்
6) காதல் ரோஜாவே (ஒருசில வரிகள் தமிழில்) - ஹரிஹரன்


>>மேடையில் நடனம் இருந்ததா?

மூன்று பாட்டுக்களுக்கு மட்டும் பின்புறம் இருந்த மேடையில் நடனம் ஆடினர்.

>>தமிழ்ப் பாடல்களின் போது மற்ற மாநிலத்தவர்களின் ஈடுபாடு?

எனக்கு முன்புறம் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் வட இந்தியர்கள். தமிழ் இந்தி இரண்டிலும் இருக்கும் 'வெண்ணிலவே,' 'பச்சைநிறமே', 'காதல் ரோஜாவே' போன்ற பாடல்களை அனைவரும் ரசித்து கேட்டனர். ஆனால் 'இனிவரும் ஒன் ஓ க்ளாக்' போன்ற தமிழில் மட்டுமே இருக்கும் பாடல்களை அவர்களால் ரசிக்க முடியவில்லை. எங்களுக்கும் அதே நிலை தான்.

>>'மங்கள் பான்டே' பாடினாரா... எப்படி இருந்தது!

மங்கள் பாண்டே பாடவில்லை என்று நினைக்கிறேன். I am not sure.

Go.Ganesh said...

உண்மையிலேயே பெரிய்ய்ய்ய்ய அரங்கமாகத்தான் தெரிகிறது........

// பின்னாலிருந்து பார்ப்பவர்களுக்கு என்ன தெரியும் என்று ஆச்சரியமாக இருந்தது. //
நீங்க எப்படி முன்னாடியே போய் சீட் பிடிச்சிட்டீங்களா ? இல்லை நம்பர் சிஸ்டம் வச்சு உங்களையும் பின்னாடி தள்ளிட்டாங்களா?

சர்தார் said...

கவர்ந்திழுக்கும் Blog Title & Description!

அழகான பதிவுகள்...

கலக்கறீங்க சுரேஷ்!

Suresh babu said...

கணேஷ்,
நல்ல வேலையாக நம்பர் சிஸ்டம் இருந்தது. நான் நிகழ்ச்சியை முன்னால் இருந்து பார்க்க வேண்டும் என்ற ஆசையில் விலை உயர்ந்த டிக்கெட்டே வாங்கியிருந்தேன். இருந்தும் மேடையிலிருந்து அரங்கத்தின் பாதி தூரத்தில் தான் என் சீட் இருந்தது. நிகழ்ச்சி நடந்துகொண்டு இருக்கும்போது, என் மனைவி என்னிடம்,மேடையை காண்பித்து, அந்த lady எவ்வளவு நன்றாக drums வாசிக்கிறாள் என்றாளே பார்க்கலாம். யாரென்று பார்த்தால் அது drums சிவமணி...:-))))


சர்தார்,

வருகைக்கும், comments-க்கும் நன்றி.

குறும்பன் said...

என்னங்க சுரேஷ், ரகுமான் 5 தமிழ் பாட்டுதான் பாடி இருக்கார்? எனக்கு ஏமாற்றம். உங்க கணக்குப்படி தமிழ் பார்வையாளர்கள் பாதிக்கு மேல, ஆனா பாட்டு கால்வாசிக்கும் குறைச்சலா? அவர் இந்தியிலும் வந்த தமிழ் பாட்டுக்களை ( பாம்பே, ரோஜா, இந்தியன், காதலன், ....) பாடி இருக்கலாம் தமிழுக்கு தமிழும் ஆச்சு இந்திக்கு இந்தியும் ஆச்சு. என்னமோ போங்க சென்னைலயே பெரிய குழுவோட கச்சேரியில் தமிழ் பாட்ட கம்மியா பாடரப்ப லண்டனில் வந்து நிறைய தமிழ் பாட்டு பாடுவாங்கன்னு எதிர்பார்ப்பது பெரிய ஆசைதான். ஆனா தமிழ் திரை பாட்டால புகழ் அடைந்த தமிழனிடம், தமிழ் பார்வையாளர்கள் அதிகம் வரும் நிகழ்சியில் நிறைய தமிழ் பாட்டு எதிர்பார்ப்பது நியாமான ஆசை.

குறும்பன் said...

இத பதிக்க மறந்திட்டேன், உங்க பதிவு அருமையாக இருக்கு , பாராட்டுக்கள் சுரேஷ்.

Arun Vaidyanathan said...

Dear Suresh,
Thats disappointing to know that you were not able to see the 3D show. Regarding Tamil songs,whenever AR rehman perfoms, this debate always arises :) UK has saravanabhavan too..Ensoy man!

Suresh babu said...

நன்றி குறும்பன்,

என்ன செய்வது?, நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருக்கும் போது எழுந்த ஆதங்கத்தை, 'இசைக்கு மொழி கிடையாது' என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு சமாதானப்படுத்திக்கொண்டு விட்டேன்.

அருண்,
லண்டனில் சரவணபவன் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. இதற்கு வந்த வரவேற்பை பார்த்து ஈஸ்ட் ஹாம் என்னும் இடத்தில் இன்னொரு கிளை வேறு திறந்துவிட்டார்கள்.