Saturday, April 28, 2018

உப்புமா.....


----சிவாஜி:----

ஏய் சக்தி...

நாந்தேன்...

இங்கிட்டு வா....

ஹோட்டலுக்கு போனீகளா?

----கமல்----

ஆமா அய்யா...

----சிவாஜி----

ஹோட்டல்ல உப்புமா  போடக்கூடாதுன்னு சண்ட போட்டிகளே... இப்ப இந்த ஊரோட உப்புமா பாசம்புரிஞ்சதா?

----கமல்----

நல்லாவே புரியுது... நாஞ்செஞ்ச தப்பும் புரியுது....அதுக்கு தண்டனையா இந்த ஊர விட்டே போயிரலாமுன்னு இருக்கேன்...

----சிவாஜி----

ஊர விட்டு போறீகளா?... நடந்ததுக்கு பரிகாரமா உப்புமா போடாம, ஊர விட்டுப்போறேன்னு சொல்லுறது கொழத்தனமா இல்ல?

----கமல்----

அதுக்காக....

----சிவாஜி----

அதுக்காக????

----கமல்----

அதுக்காக உப்புமா பண்ணுறது ஈசியா இருக்குன்னு தெனமும் உப்புமா சாப்புட்டுகிட்டு இருக்குறது முட்டாள்தனம்...

----சிவாஜி----

இந்த உப்புமா சாப்புடுற  கூட்டத்துல ஒ அப்பனும் ஒருத்தன் தானுன்னு மறந்துடாத...

----கமல்----

அப்புடி பாத்தா நானுந்தாயா ஒருத்தன்... ஆனா அத நெனச்சு பெரும பட முடியல...
எரநூறு வருசமா உப்புமா சாப்புட்டுக்கிட்டு இருக்குற இந்த கிராமத்துல நான் இட்லி சாப்டாம இருக்க விரும்பல அய்யா...

----சிவாஜி----

எரநூறு வருசம் உப்புமா தான் சாப்பிட்டுகிட்டு இருக்கோமுன்னுதான் ஒத்துக்குறேன்.... ரெண்டாயிரம் வருசமா ரவையையும் காய்கறியையும் தூக்கிகிட்டு,  உப்புமா, கேசரின்னு சாப்புட்டுகிட்டு இருந்த பயக...

நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் சமைக்குரதுக்கு ஆள் வேணுமுன்னு கேட்டப்ப...  ஓடிப்போயி முதல் வரிசையில ரவையோட நின்ன முக்காவாசி பயக நம்ம பயகதேன்.

திடீருன்னு அவன உப்புமாவ தூக்கி போட்டுட்டு இட்லியும் கெட்டி சட்னியும் சாப்ட வாடான்னா  எப்டி வருவான்? நீ நெறைய சாப்டவனாச்சே....

கூட்டிட்டு வா.... அவனுக்கு சூடா இட்லி அவிச்சு போடு.... ஆனா அந்தப்பய மெதுவாதான் சாப்ப்டுவான்... மெதுவாதா சாப்டுவான்...

----கமல்----

மெதுவான்னா எம்புட்டு மெதுவாயா... அதுக்குள்ள நானே போயி சமைக்க ஆரம்பிச்சுடுவேன் போல இருக்கே...

----சிவாஜி----

போ... சமச்ச்சுட்டு போ....நா தடுக்க முடியுமா?.... எல்லா பய புள்ளைகளும் ஒருநாளக்கி சமைக்க வேண்டியது தேங்...  சமைக்குறது முக்கியந்தாங்... இல்லையின்னு சொல்லல....
ஆனா மத்தவங்களுக்கு உப்புமா பண்ணி குடுத்துட்டு செத்து போறது தான் அந்த சமையலுக்கே பெரும... கோதுமைய வெதச்ச ஒடனே உப்புமா சாப்புடனுன்னு நெனைக்க முடியுமோ...
இன்னைக்கு நா வெதைக்குறேங்... நாளைக்கு நீ ரவா உப்புமா சாப்பிடுவ... அப்புறம்... ஓ மவன் சாப்புடுவான்...  அதுக்கு அப்புறம்... அவன் மவன் சாப்புடுவான்.... அதெல்லாம் இருந்து பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன்...
ஆனா ரவ... நான் போட்டது.... இதெல்லாம் எனக்கு பெருமையா? ஹேங்.... கடம..... ஒவ்வொருத்தனோட கடம...

----கமல்----

ஆனா இந்த உப்புமால ரவ போடுற வரைக்கும் எவ்வளவு சமைச்சாலும் வெளங்காதுயா.... என்ன விட்டுரங்கய்யா... நா போறே...

(மியூசிக்)

----சிவாஜி----

இட்லியோட சாம்பார இட்டு கட்டி அடிச்சுட்டு, நெஞ்சு நிமித்தி அய்யாவ பேசுற வயசுல்ல்ல....

----கமல்----

இல்ல அப்படி இல்ல அய்யா...

----சிவாஜி----

வேற எப்படி? வேற எப்படின்னு கேக்குறேன்.... தாயில்லாத புள்ளயாச்சேன்னு இட்லியா ஊட்டி ஊட்டி வளத்தேன்ல.... உனக்கு பிடிக்கலைன்னு இதுவரைக்கும் ஒரு வாய் உப்புமா ஊட்டியிருப்பேனா? ஒரு வாய் உப்புமா?

நா... எங்கடமைய சென்சுபுட்டேன்... நீ ஒங் கடமைய செஞ்சியா? நீ பெருசா லண்டன்ல பீட்சாவும் பர்கரும் சாப்புடுரதுக்காக...இந்த பூமியில கோதுமையா வெதச்சு பணம் அனுப்பிச்சமே.... அந்த காட்டுமிராண்டி பசங்களுக்கு என்ன பண்ணுன நீயி??

ஏதாவது பண்ணு... அதுக்கப்புறம் வீட்ட விட்டுப்போ.... ஹோட்டல் வையி...ரெஸ்டாரண்டு வையி... அப்புறம் அந்த தெளுங்கச்சிய கலியாணம் பண்ணிக்க.......சேந்து இட்லி சாப்புடு....என்ன இப்போ.... போயேன்....

----கமல்----

நல்ல உப்புமா இங்க இருந்து தான் சாப்புடணும்னு இல்ல அய்யா.... வெளிய போயும் இட்லி சாப்புடலாம்.... நா போயி சாப்புடறேன் அய்யா...

----சிவாஜி----

சாப்புட்டுட்டு வரேன்னு சொல்லுகளேன்.... அந்த நம்பிக்க தா  வீட்டுல உள்ளவங்களுக்கு முக்கியம்....

ஏய்.... எங்கையா சமயக்காரேன்.....ஏல யாருரா இவன்... எங்கய்யா சமயக்காரேன்....

----சமையல் காரர்----

அய்யா....

----சிவாஜி----

இங்கதா இருக்கியா....

அய்யா... இட்லி சாப்புடுரதுக்காக வெளியூரு போறாகளாம்... ரொம்ப நாள் இங்க இருந்து உப்புமா சாப்பிட மாட்டாங்களாம்...

அவுகளுக்கு இட்லி பண்ணி போடு...

----சமையல் காரர்----

ஒரு பத்து நாள் செண்டு இட்லி பண்னட்டுங்க்களா?

----சிவாஜி----

ஏனப்பு... ஒரு பத்து நாள் உப்புமா சாப்புட மாட்டீகளா?

(உக்கார வைத்து)

பத்து நாள் இருக்க மாட்டீகளா? ஏன் மகன பக்கத்துல வச்சுகிட்டு உப்புமா செஞ்சு போடணுமுனு ஆச எனக்கு இருக்காதா????
நீங்க ஊரெல்லாம் போயி சாப்டு வருறப்ப... அய்யா சாப்பிட்டு வருறேம்பீக... ஹ்ம்....

----கமல்----

உங்கள விட்டுட்டு சாப்புட போகலையா.... நா போயி இட்லி கடை போட்டுட்டு உங்களையும் கூட்ட்டுட்டு போறேங்க அய்யா....

----சிவாஜி----

என்னையா?....ஹ்ம்... ஹ் ஹ்ம்...  இந்த கட்ட இங்கயே எரிஞ்சு வெந்து சாம்பலாகி இந்த மண்ணுக்கு ஓரமாகுமே தவிர.... வெளிய வராது....

இந்த உப்புமாவ சட்டியோட கொட்டிடாதப்பா.... அம்புட்டு தான் நா சொல்லுவேன்... புரியுதா....


----கமல்----

அய்யா... நா இந்த ஊருக்கு ஒரு நாள் உப்புமா செஞ்சு போடுவேன் அய்யா... என்ன நம்புங்க....

----சிவாஜி----

ஒங்கள தானே நம்பனும்.... இந்த வீட்டுல யாரு இருக்க எனக்கப்புறம் உப்புமா சாப்புட?

(அழுகை)

போ....

--
BGM

போற்றி சாப்பிடடி பொண்னே.... உப்புமா சாப்புடாதவன் வாயில் மண்ணே.....

(உப்புமா பிரியர்கள் சங்கம்)

Tuesday, March 25, 2014

பொங்கல், சட்னி, சாம்பார்...

இந்த பொங்கல்,சட்னி சாம்பார் காம்பினேஷனை கண்டுபிடித்தவரை கண்டுபிடித்து பொங்கல் வைத்து கோயில் கட்ட வேண்டும்...

எழுந்தவுடன், இன்னைக்கு பொங்கல் என்று ப்ரக்ருதி சொன்னதிலிருந்து நாள் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது...  சமையலறைப்பக்கம் மூக்கும் காதும் வைத்து காத்திருந்தேன்...

சமையலறையிலிருந்து சட்னிக்கு தாளிக்கும் சத்தம் வந்தபோது `குழலினிது யாழினிது என்போர், கடுகு தாளிக்கும் சத்தம் கேளாதோர்` என்று வயிறு மூளைக்கு சொல்லியது... பொங்கல் ரெடியென்று  குக்கரும் தன் பங்குக்கு கூவியது...இந்த சேர்ந்திசைக்கு ஏற்ப வயிறும் பசியில் தாளம் போட ஆரம்பித்தது...

வள்ளுவன் இருந்திருந்தால்,

"செவிக்குணவு தாளிக்கும் சத்தம் பொங்கல்
வயிற்றுக்கும் ஈயப்படும்"

என்று பாடியிருப்பான்....எனக்கென்னவோ வாசுகி வள்ளுவருக்கு பொங்கல் செய்து கொடுத்திருக்க மாட்டார் என்று என்னுடைய பொங்கலில் மயங்கிய உள்ளுணர்வு கூறுகிறது...

இஞ்சியும், மிளகும் நெய்யில் தாளிக்கப்படும்போது வரும் மணத்திற்கு என் சொத்தையே எழுதிக்கொடுக்கலாம்... இதை செய்யும் கைக்கு தங்கக்காப்பு செய்து போடலாம்...(ப்ரக்ருதிக்கு, தமிழ் படிக்கத்தெரியாது... )

"பொங்கல் ரெடி" என்று ப்ரக்ருதி தட்டோடு வந்தபோது எனக்குண்டான பரவச நிலையை விளக்க வார்த்தைகள் பத்தாது... "இருபது கோடி நிலவுகள் கூடி" என்று ப்ரக்ருதியை பார்த்து பாடத்தோன்றியது....

தட்டை மூன்றாக பாகமாக பிரித்துக்கொண்டு, ஒரு பாகத்தில் பொங்கல், இரண்டாம் பாகத்தில் சாம்பார், மற்றதில் சட்னியும் இட்டு, அது மூன்றும் சந்திக்கும் இடம் பாருங்கள், இதைத்தான் திரிலோக சங்கமம் என்று சொல்லியிருப்பார்களோ !!!

இந்த சங்கமத்தில் கை வைத்து மூன்றையும் குழைத்து  வாயில் வைத்தால் நாக்கிற்கு சுவைக்ககூட அவகாசம் கொடுக்காமல் இளஞ்சூட்டில், நெய்யின் வழவழப்பில்  அப்படியே தொண்டையில் வழுக்கிக்கொண்டு போகும் பாருங்கள்.... தேவாம்ருதம்.... தேவாம்ருதம்...!!!

இந்த தேங்காய் சட்னி பாருங்கள்...தாளித்த போது வறுபட்ட கருவேப்பிலையில் கூட தனி சுவை... முருங்கைக்காய் சாம்பாரும், பொங்கலில் எட்டிப்பார்க்கும் நெய்யில் வறுத்த முந்திரியும், போட்டி போட்டுக்கொண்டு, நீ சுவையா, நான் சுவையா என தனி ஆவர்த்தனம் வாசித்ததில் நாவிற்கும், வயிற்றிற்கும் ஒரே கச்சேரிதான்...

இதையெல்லாம் அனுபவித்து அனுபவித்து சாப்பிட்டு முடித்து நிதானத்திற்கு வருவதற்க்குள், "இந்தாங்க மச்சான் டீ..." என்று எதிரில் நின்ற ப்ரக்ருதியை பார்த்து மனதில் காதல் பொங்கலோ பொங்கு என்று பொங்கியது...


Friday, October 26, 2007

தீபாவளி விழா 2007 !!!

ஒரு விழாவை ஏற்பாடு செய்து எடுத்து நடத்துவதுதான் எவ்வளவு கடினமான காரியம் !!! டுபுக்கு மற்றும் சக்ராவின் முயற்சியால் இந்த முறை தீபாவளி சந்திப்பு நிகழ்ச்சிக்கு ‍Hemel Hempstead-ல் எல்லோரும் சந்தித்தோம். அருமையான விழாவாக அமைந்திருந்தது.

விழாவின் முக்கிய அம்சமாக மூன்று சிறுவர்கள் சிவாஜி பாட்டுக்கு ஆடிய நடனம் தூள் கிளப்பியது. அதன் பிறகு ரங்கா மற்றும் குழுவினர் ‍fashion show-வில் பட்டையை கிளப்பினார்கள். பிறகு சரண்யா மற்றும் நண்பர் ஆடிய நடனம் மெய் சிலிர்க்க வைத்தது...

அடுத்துதான் முக்கியமான ஒன்று... சாப்பாடு.... வாவ்... போனமுறை போலவே இந்த முறையும் அருமையாக அமைந்திருந்தது.

அதன் பிறகு நடத்தப்பட்ட‌ குழு போட்டிகள் மிகவும் நன்றாக வந்திருந்தது... கல்லூரி நாட்களை நினைவு படுத்தியது.

அதைவிட சுவாரசியமான விஷயம் குழுவிற்க்கு வைக்கப்பட்ட பெயர்கள்.
1) ப்லேடு பக்கிரி,
2) ரவுசு ராணி
3) அல்டாப்பு அலமேலு
4) பட்டாசு பாலு
5) பால் பாண்டி
6) லார்டு லபக்கு தாஸ் &
7) மொக்கை ராசு

Snacks competition ஒன்று வைத்திருந்தார்கள்.... அதற்கு நான் நடுவர் வேறு. ஆஹா !!! புகுந்து விளையாடி விட்டேன் சும்மா !!! மூன்று நடுவர்கள். கடைசியில் போட்டியில் ஜெயித்தது மிசஸ் டுபுக்கு...சில பேர் Match fixing என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்களாம் !!! என்ன கொடுமை சரவணன் இது !!!!

மொத்தத்தில் மறக்க முடியாத அருமையான சந்திப்பு...புகைப்படங்கள் கீழே !!!

DeepavaliParty2007

Saturday, August 04, 2007

புகைப்படப்போட்டிக்காக...

புகைப்படப்போட்டிக்காக நான் எடுத்த எனக்குப்பிடித்த எந்தவித மாற்றங்களும் செய்யப்படாத புகைபடம்.

Saturday, July 28, 2007

விகடனில் படித்த ரசித்த கவிதை...

நானாக அவனும் அவனாக நானும்
சாத்தியமில்லை
எனது சந்தோஷங்கள் அவனது சந்தேகங்கள்
எனது ஆசைகள் அவன் கற்பனை செய்யாதவை
அவனது ஆசைகள் என்னை அடிமைகொள்பவை
எனது கற்பனைகள் அவனுக்குப் புரியாதது
அவனது கற்பனைகள் அலுத்துப்போனவை
எனது நோக்கு அவனுக்குப் புதியது
அவனது நோக்கு எனக்குப் பழையது
அவன் வளர்ந்தும்... நான்
நான் குழந்தை... அவன்
நான் அவனாவதும் அவன் நானாவதும்
சாத்தியமே இல்லை
நான் நான் அவன் அவன்

-றஞ்சனி

Saturday, July 14, 2007

சுஜாதா ரசித்த தமிழ் ராப்...

ஆனந்த விகடனில் சுஜாதா ரசித்ததாக எழுதிய தமிழ் ராப்....

Sunday, July 01, 2007

மழலை மொழியில்... முன்பே வா !!!

மழலை மொழியில்... முன்பே வா !!!

ஆகா !!! எத்தனை அழகு !!!!

Sunday, November 05, 2006

ஜோதிகாவா? சவுந்தர்யாவா?

இன்று utube-ல் மேய்ந்துகொண்டு இருக்கும்போது இது கிடைத்தது. எனக்கென்னவோ சவுந்தர்யா இதில் சிறப்பாக பண்ணியிருக்கிறார் என்று தோன்றுகிறது.
miss-பண்ணிய ஒரே விஷயம் 'என்ன கொடுமை சரவணன்' :-)

இனி தமிழில்,

Tuesday, October 31, 2006

மவுனத்தை முறிக்க....

பதிவு எழுதி ரொம்ப நாள் ஆகிறது... எப்படி திரும்ப ஆரம்பிப்பதென்று தெரியவில்லை... தற்போதைக்கு நீண்ட நாள் மவுனத்தை முறிக்க லண்டன் சென்றபோது சுட்ட சில புகைப்படங்கள்.


Sunday, June 18, 2006

கலக்கிய கானா.....

இந்த உலகக்கோப்பை போட்டிகளில் எதிர்பார்க்கப்பட்ட பெரிய அணிகள் அனைத்தும் சொதப்பி வருகின்றன... ஒரு ஆட்டம் கூட சுவாரசியமாக இல்லை...

நேற்று நடந்த கானா மற்றும் செக் குடியரசுக்கு இடையே நடந்த போட்டி அருமையான ஒன்றாக அமைந்து இருந்தது...கானாவின் ஆட்டம் யாரும் எதிர்பாராத விதமாக அற்புதமாக இருந்தது. இதற்கு முந்திய போட்டியில் இத்தாலியுடனான போட்டியில் கானா நன்றாக விளையாடியும் தோற்றுப்போனது துரதிஷ்டவசமானது.

கானா அடுத்து USA-வை சந்திக்க உள்ளது. எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

இப்போதைக்கு என்னுடைய favourite கானா தான்.

Tuesday, June 13, 2006

கோயில்களில் தொலைந்து போகும் மன அமைதி...

இந்த முறை இந்தியா சென்றிருந்த போது இராமேஷ்வரம் மற்றும் திருப்பதிக்கு செல்ல நேர்ந்தது. அப்போது அங்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியதன் விளைவு இந்த பதிவு.

இராமேஷ்வரம் போய் இறங்கியவுடன் guide-களின் தொல்லை ஆரம்பித்து விட்டது... வேண்டாம் என்றாலும் அவர்கள் விடுவதாக இல்லை. பின்னாலேயே துரத்தி வந்து தொல்லை. அதற்குப் பிறகு வாளிகளை வைத்துக்கொண்டு தீர்த்தம் இறைத்து ஊத்துவதற்கு ஒரு பெரிய கோஷ்டி நின்று கொண்டிருக்கும். வெளியே உள்ள கோயில் தீர்த்தக் கவுண்டரில் சீட்டு வாங்கி முறையாக சென்றால் ஒரு நாள் முழுவதும் தீர்த்தம் இறைத்து ஊற்றுபவர்களுக்காக காத்துக்கொண்டு நின்று கொண்டிருக்க வேண்டியது தான்.

இவையாவது பரவாயில்லை. உள்ளே அர்ச்சகர்கள் பண்ணும் அட்டூழியம் தாங்க முடியாது. அர்ச்சனைத் தட்டில் ரூபாய் 50 வைத்தால் தான் அர்ச்சனை பண்ணுவேன் என்று உட்கார்ந்துவிட்டார். அதை வாங்கி அவருக்கென்று ஒரு பெரிய பை ஒன்று இருக்கிறது அதில் வைத்த பின்புதான் பூஜையையே ஆரம்பிக்கின்றார். பூஜை பண்ணியவுடன் தீபாரதணைத்தட்டை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு அவர் சென்று விட்டார். அதை கொண்டு வந்து காண்பிக்கும் வேறு ஒரு அர்ச்சகர் பணம் போடச்சொல்லி வெளிப்படையாக கத்துகிறார்.

இப்போதெல்லாம் கோயில்களுக்குச்சென்றால் முன்பு இருந்தது போல் மன அமைதி கிடைப்பதில்லை. ஏதோ போருக்கு போய் திரும்பிய ஒரு அலுப்புத் தான் ஏற்படுகிறது.

இனிமேலெல்லாம் கோயில்களுக்கு சென்றால் இறைவனை தூரத்திலிருந்து தரிசித்துவிட்டு ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்து கோயிலின் அமைதியை உணர்ந்துவிட்டு, சிற்பங்களை ரசித்துவிட்டு வரலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

Thursday, February 23, 2006

புது வீடு மாற்றலும்... இணையத்தொடர்பும்...

அப்பாடா!!! ஒருவழியாய் இணைய தொடர்பு கிடைத்து விட்டது.

புது வீட்டிற்கு மாற்றலாகி இன்றோடு இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. பழைய வீட்டில் இருந்த இணையத் தொடர்பை புது வீட்டிற்கு மாற்றச்சொல்லி விண்ணப்பித்து தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஞாபகப்படுத்தி... இந்தா அந்தாவென்று இழுத்தடித்து...... கடைசியில் ஒருவருட கான்ட்ராக்டிலிருந்து விடுவித்துவிடுங்கள் என்று சொல்லி.....ஒருவழியாய் புது இணையத்தொடர்பு கிடைத்தாகிவிட்டது. முன்பு கொடுத்துக்கொண்டு இருந்த அதே பணத்திற்கு 2 MBPS அகலப்பாட்டை இணைப்பு.

வந்து தமிழ்மணம் பார்த்தால், அப்படி ஒரு ஆச்சரியம்... எத்தனையோ புதுமுகங்கள். பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது.

இனி அடிக்கடி சந்திக்கலாம்...

Thursday, December 01, 2005

பிபிசி தமிழோசையின் பாட்டொன்று கேட்டேன்

ஆஹா!! எவ்வளவு அருமையான ஒரு நிகழ்ச்சி. லண்டனில் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குப் பிறகு கலந்து கொண்டவர்கள் அனைவரும் தொடர்பில் இருப்பதாக முடிவெடுத்து டுபுக்கு ஒரு யாஹூ குழுமம் ஆரம்பித்தார். அதில் ரோஹினி வெங்கடஸ்வாமி அவர்கள் 'பாட்டொன்று கேட்டேன்' பற்றி எல்லோருக்கும் தெரியப்படுத்தி இருந்தார். அறிமுகப்படுத்தியதற்கு அவருக்கு முதலில் நன்றி.

இது வரைக்கும் அறுபது பகுதிகள் வெளியாகி இருக்கின்றன. அனைத்து பகுதிகளுக்கும் சுட்டிகள் பிபிசி தமிழ் இணையத்தளத்தில் இன்றும் கேட்க கிடைக்கின்றன. இதோ சுட்டி உங்களுக்காக.

சம்பத் குமார் அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறார். எனக்குத்தெரிந்ததெல்லாம் இளையராஜாவிற்கு பிறகான தமிழ் திரையிசையைப்பற்றித் தான். அதற்கு முன்பான தமிழ் திரையிசை வரலாற்றினைப்பற்றிய ஒலித்தொகுப்பை இசையுடன் கேட்கும்போது ரொம்பவே மகிழ்சியாக இருந்தது. ஏன்?.. இளையராஜாவின் இசையில் வெவ்வேறு பாடகர்கள் பாடிய பாடகர்கள் பாடிய பாடல்களை சம்பத் குமார் அவர்கள் தொகுத்து வழங்குவதை கேட்கும்போது அதைப்பற்றிய பல விஷயங்கள் தெரிய வந்தன.

நிகழ்ச்சி இன்னும் வந்து கொண்டு இருக்கிறது. நிகழ்சியைப்பற்றி மேலும் தகவல்களை சொல்லி உங்களை போரடிக்க விரும்பவில்லை. நீங்களே கேட்டுப் பாருங்கள்.

Sunday, November 13, 2005

50 First Dates - பட விமர்சனம்

ரொம்ப நாளைக்கு அப்புறம் படம் பார்த்தபின்னரும் படத்தைப்பற்றி சிந்தித்து அசை போட வைத்த ஒரு படம். ரொம்ப சீரியசான ஒரு படம் என்று நினைக்க வேண்டாம். அதிகம் அலட்டிக்கொள்ளாத அருமையான ஒரு படம்.

சார்லிஸ் ஏஞ்சல்ஸில் ஒருவரான Drew Barrrymore-ம் Adam Sandler -ம் நடித்துள்ளனர். கதை முழுவதும் ஹாவாய் தீவில் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளரை எப்படி பாராட்டுவது?படத்தின் நாயகி ஒரு விபத்தினால் மூளையில் அடிபட்டு Short term memory loss என்னும் வியாதியால் பாதிக்கப்பட்டவள். விபத்துக்கு பின்பு நடக்கும் அத்தனை சம்பவங்களும் தினமும் அவள் தூங்கி எழுந்தவுடன் மறந்துவிடும்.

ஒரு நாள் நாயகியை ஒரு உணவகத்தில் சந்திக்க நேரும்போது நாயகன் அவள் மீது ஈர்க்கப்பட்டு தினமும் சந்திக்க நேர்ந்து, நாயகியின் தந்தை மற்றும் அண்ணனின் மூலம் அவளது வியாதி பற்றிய உண்மையை அறிய நேர்கிறது. அறிந்த பின் நாயகியின் மீது இன்னும் ஈர்ப்பு கூடுகிறது.

அதன் பின் தினமும் நாயகனும் நாயகியும் சந்திக்கும் சம்பவங்கள் மிகவும் சுவையாக அமைக்கப் பட்டிருக்கிறன. படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரது கதாபாத்திரங்களும் மனதில் பதியும் படி அமைக்கப்பட்டிருக்கிறன.

படம் பார்த்தவுடம் இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் எப்படி இருக்கும் என்பது பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். உரையாடல் சுவையாக இருந்தது.

கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள்.

Friday, November 11, 2005

சிவகாசியும்... விகடன் விமர்சனமும்..

நேற்று தான் சிவகாசி படம் பார்த்தேன். இன்று விகடன் விமர்சனம் பார்க்க நேர்ந்தது.. விகடன் பார்த்தவுடன் ஏற்பட்ட முதல் அதிர்ச்சி... சிவகாசி படத்திற்கு 42 மதிப்பெண்கள். சத்தியமாக நம்ப முடியவில்லை.

இவ்வளவு நாள் விகடன் விமர்சனத்தை பார்த்த பின் படம் பார்க்கும் பெரும்பாலானவர்களில் ஒருவனாக இருந்தேன்.. சிவகாசி படத்திற்கு கொடுக்கப்பட்ட மதிப்பெண்களைப்பார்க்கும்போது விகடனின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் நிலைமை உண்டானது..

என் அனுபவத்தில் சிவகாசி அப்படி ஒரு மகா மட்டமான படம்... இந்த படம் மட்டும் நன்றாக ஓடிவிட்டால் அவ்வளவுதான்...இதே போல் 'தென்காசி' 'வடகாசி' என்று வரிசையாக பத்து படங்கள் வருவது உறுதி.

இந்த படத்தை பற்றி விரிவாக எழுதி உங்களின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. உங்களின் சகிப்புத்தன்மையின் எல்லை எவ்வளவு தூரம் என்று தெரியவேண்டும் என்று பார்க்கவேண்டுமானால் ஒரு முறை இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள்.

நான் சொல்லி கேட்கவா போறீங்க... என்னவோ போங்க... யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !!!

Monday, November 07, 2005

அப்பா!! தமிழ்மணம் பாத்து எவ்வளவு நாளாச்சு?

நட்சத்திர வாரத்தை அடுத்து, அலுவலக புதிய வேலைப்பளு, தீபாவளிக் கொண்டாட்டம், ஒரு வாரம் பாரிஸ் விடுமுறைப் பயணம் என்று இரண்டு வாரங்கள் எப்படி போனது என்றே தெரியவில்லை. எதையோ தவற விட்டுவிட்டது போல ஒரு உணர்வு இருந்து கொண்டே இருந்தது தான் உண்மை.

பாரிஸ் பயணம் பற்றி நிறைய எழுத வேண்டும்....ஆஹா!! எவ்வளவு அருமையான ஊர்...பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள். பயணக்களைப்பு.. அப்புறம் நிறைய எழுதுகிறேன்.. இப்போது.. சில புகைப்படங்கள்.

Louvre ஓவியக்கூடத்தின் முன்பு,

ஈஃபில் டவரின் சில காட்சிகள்,
மைக்கெல் ஏஞ்சலோவின் ஒரு சிற்பம்,Louvre ஓவியக்கூடத்தின் மேற்கூரை,லியார்னோ டாவின்சியின் மற்றுமொரு ஓவியம்,Louvre ஓவியக்கூடத்திற்கு எதிரில் ஒரு காட்சி,பாரிஸின் புறநகரிலிலுள்ள ஒரு சர்ச்,டிஸ்னிலாண்டில் சில காட்சிகள்,வானுயர்ந்த கட்டிடங்கள்,

மனதைக் கவர்ந்த சில காட்சிகள்,Sunday, October 23, 2005

நட்சத்திர வாரத்திற்கு நன்றி...

நட்சத்திர வாரத்திற்கு வாய்ப்பு கொடுத்த மதிக்கு மற்றும் பார்த்து படித்த மற்றும் பின்னூட்டமிட்டு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

கடந்த வாரத்தில் குறிப்பிடத்தக்கவை.

1) ஐம்பதாவது பதிவு
2) பத்தாயிரமாவது பார்வையாளர்.
3) பிறந்த நாள் வாழ்த்துக்கு நமது ஜனாதிபதியிடமிருந்து நன்றி கடிதம்..
4) கடுமையான வேலைப்பளுவுக்கு இடையிலும் இந்த ஒரு வாரத்தில் ஒன்பது பதிவுகள், ஆயிரத்து ஐநூறு பார்வைகள்.

இந்த வாரத்தில் வெளிவந்த சக வலைப்பதிவாளர்களின் அனைத்துபதிவுகளையும் படிக்கமுடியவில்லை. அவை அனைத்தையும் இந்த வாரத்தில் படிப்பதாக உத்தேசம்.

தங்கர் மற்றும் குஷ்பு வாரங்களுக்கு பிறகு இந்த வாரம் தமிழ்மணத்தில் சூடான தலைப்பாக தமிழ்மணத்தில் காசி அவர்கள் எடுத்த சில நடவடிக்கைகள் பற்றிய பதிவுகள் இருந்தன. என்னைப்போறுத்தவரை தமிழ்மணம் எனக்கு தமிழில் எழுதுவதற்கு ஊன்றுகோலாக இருந்த ஒரு தளம். அதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்த காசி அவர்களுக்கு கண்டிப்பாக நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்...

சில மத சார்பான விரோத மனப்பான்மையை தூண்டும் சில பதிவுகளைப்படிக்கும்போது இவையெல்லாம் எந்த அளவுக்கு விரோத மனப்பான்மையை தூண்டுவதாக இருக்கின்றன என்று வருத்தமாக இருந்தது. இவற்றையெல்லாம் தமிழ்மணத்தில் தடை செய்யக்கூடாதா? என்று ஆதங்கமாக இருந்தது உண்மை. ஆனால் ஒரு நடவடிக்கையை நல்ல நோக்கத்தில் எடுக்கும்போது எந்த அளவுக்கு எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கடந்த வாரத்தில் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

இணையக் குசும்பன் மற்றும் சின்னவன் இருவரின் பதிவுகள் நீக்கப்பட்டது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது உண்மை. தமிழ்மணத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டுத்தான் இதில் சேர்ந்தோம் என்பது உண்மையான வாதமாக இருந்தாலும் அனைவரும் காசியின் முடிவுக்கு எதிராக கருத்துக்களை சொல்வது என்பது எதற்காக என்று பார்த்தால், தமிழ்மணம் பெரும்பாலும் ஒரு நிறுவனத்துக்கு மேலாக, ஒரு குடும்பமாகவே பார்க்கப்பட்டதால் தான்.

இது பற்றிய அனைவரின் கருத்துக்களையும் படித்தபின் காசி அவர்கள் அவரது கருத்துக்களை தெரிவிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதுவரை பொறுத்திருத்தல் தான் ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும்.

மற்றொருமுறை அனைவருக்கும் நன்றி.

Saturday, October 22, 2005

லண்டன் சுத்திப் பாக்கலாமா? - பாகம் 1

இப்போது இந்தியாவிலிருந்து லண்டனுக்கு நிறைய விமான நிறுவனங்கள் சேவையை ஆரம்பித்துள்ளன. சில விமானங்களில், மிகக்குறைந்த கட்டணத்திலேயே லண்டன் வந்து போகலாம். லண்டனில் ஹீத்ரோ, காட்விக், லூடன், லண்டன் நகர் விமான நிலையம் என்று நான்கு விமான நிலையங்கள். ஆனால் இந்தியாவிலிருந்து வரும் விமானங்கள் அனைத்தும் ஹீத்ரோ(Heathrow) விமான நிலையத்திற்கே வருகின்றன. சில விமானங்கள் காட்விக்(Gatwick) விமான நிலையத்துக்கு வருவது உண்டு.

லண்டன் சுற்றிப்பார்க்க வருவதற்கு தகுந்த காலநிலை எதுவென்று கேட்டால் கோடைகாலம் தான். குறிப்பாக ஏப்ரல் மாதத்திலிருந்து ஆகஸ்டு மாதம் வரை காலநிலை நன்றாக இருக்கும். அதிகாலை ஐந்து மணிக்கே சூரியன் உதித்து இரவு பத்து மணிவரை நன்றாக வெளிச்சமாக இருக்கும். அதனால் வருவதற்கான பயணத்தை அப்போது திட்டமிடுவது நல்லது. உடையை பொறுத்தவரை உச்ச கோடைகாலத்தில் நம்மூரில் அணியும் உடையே போதுமானது. ஆனால் உச்ச கோடைகாலத்திற்கு முன்பும் பின்புமான சமயத்தில் அணிவதற்கு குளிர்கால உடைகளை எடுத்துக்கொண்டு வருவது நல்லது.


தங்குவதற்கு நிறைய 'படுக்கை மற்றும் காலையுணவு'(B&B) வசதியுள்ள இடங்கள் குறைந்த விலைக்கே கிடைக்கின்றன. லண்டனின் மையப்பகுதியில் இருக்கும் பெரிய ரயில் நிலையம் 'விக்டோரியா ரயில் நிலையம்'. இதற்கு அருகில் B&B வசதியுள்ள இடங்கள் நிறைய இருக்கின்றன. முன்னரே reserve செய்திருக்காவிட்டாலும் விக்டோரியா ரயில் நிலையத்திற்கு வெளியே சுற்றுலா மையத்திற்கு அருகில் உள்ள counter -களில் உடனே book பண்ணிக்கொள்ளலாம். தோராயமாக ஒருவருக்கு ஒருநாளைக்கு 25 பவுண்டுகள் ஆகும். செலவுக்கென்று ஒரு நாளைக்கு குறைந்தது 75 பவுண்டுகள் என்று வைத்துக்கொள்வது நல்லது. இதில் உணவு, போக்குவரத்து, நுழைவுக்கட்டணங்கள் எல்லாம் அடங்கும்.

லண்டன் நகரத்தில் பாதாள ரயில் போக்குவரத்து போக்குவரத்து மிகவும் பிரபலமானது. 'Tube' என்று இதை சொல்லுவார்கள். இது லண்டன் நகரின் பெரும்பாலான எல்லா இடங்களையும் இணைக்கிறது. எளிதாக புரிந்து கொள்வதற்காக பல்வேறு வர்ணங்களில் ரயில் போக்குவரத்து பாதைகளை குறித்து வைத்திருக்கிறார்கள். புதிதாக வருபவர்கள் கூட எளிதில் பார்த்து புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு நன்றாக எளிமைப்படுத்தியிருக்கிறார்கள். கீழே உள்ள படத்தைப்பாருங்களேன் உங்களுக்கே புரியும்.


நகரில் பெரும்பாலும் எல்லா ரயில் நிலையங்களிலும் சுற்றுலா உதவி மையங்கள் இருக்கும். சுற்றிப்பார்க்க செல்லும்போது, அந்த இடம் எந்த ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கிறது என்று குறித்துவைத்துக்கொள்வது நல்லது. அதே போல் அந்த நாளில் எந்தெந்த இடங்கள் பார்க்கப்போகிறோம் என்பதை முன்பே தயார் செய்வது ரயில் பிரயாணத்தில் அதிக நேரத்தை வீணடிக்காமல் இருப்பதை தடுக்கும்.

முதன் முதலாக யாருடன் உதவியுடன் இல்லாமல் செல்பவர்கள் 'The Big Bus' போன்ற திறந்த மேற்புறத்துடன் நேரடி வர்ணனையுடன் கூடிய பேருந்துகளில் பயணம் செய்வது வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும். லண்டனில் முக்கியமான எல்லா இடங்கள் வழியாகவும் போய்
வருமாறு ஒரு சுற்றுப்பாதை வகுத்திருப்பார்கள். ஒருமுறை அனுமதிச்சீட்டு வாங்கினால் அது 24 மணி நேரத்துக்குள் எந்த இடத்திலும் இறங்கி ஏறிக்கொள்ளலாம். 15 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு பேருந்து வந்து போய்க்கொண்டு இருக்கும். இத்துடன் இலவசமாக ஒரு படகு சவாரிக்கான
அனுமதிச்சீட்டும் தருவார்கள்.

பாஸ்போர்ட் போன்றவற்றை பத்திரமாக வைத்துக்கொள்வது நல்லது. பயப்படும் படியாக இல்லாவிட்டாலும் சில இடங்களில் திருட்டு பயம் உண்டு. பொதுவாகவே எங்கும் வழியில் காவலர்கள் நிறுத்தி பாஸ்போர்டை காட்ட சொல்லுவதில்லை. செலவுக்கு Travellers cheque -ஆக பணத்தை மாற்றி எடுத்துக்கொண்டு வருவது நல்லது. முழுவதுமாக பவுண்டுக்கு மாற்றிவிடாமல் அன்றைய செலவுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும் மாற்றி எடுத்துக்கொண்டு வருவது நல்லது.

அடுத்த பதிவுகளில் லண்டனில் எந்தெந்த இடங்கள் முக்கியமாக பார்க்க வேண்டியவை என்பதை பார்க்கலாம். ...

Friday, October 21, 2005

பெங்களூர் மலர்க் கண்காட்சி...

இவை பெங்களூர் லால் பார்க்கில் வருடா வருடம் நடக்கும் மலர்க் கண்காட்சியின் போது எடுக்கப்பட்டவை.

Thursday, October 20, 2005

தேசப்பற்று...

சில பதிவுகளில் சிலர் 'அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியாவை குறை கூற எந்த அருகதையும் இல்லை' என்பது போல் எழுதுவதை படிக்க வருத்தமாக இருக்கிறது.

இந்தியாவில் வசிப்பதால் மட்டுமே அல்லது இந்தியாவை புகழ்ந்து பேசுவதால் மட்டுமே ஒருவர் தேசப்பற்று மிக்க இந்தியர் ஆகிவிடமுடியாது. தேசப்பற்று என்பது உணர்வு பூர்வமான ஒன்று. அது எங்கிருந்தாலும் எங்கு வசித்தாலும் மாறாத ஒன்று. குடும்பத்தில் இருக்கும் தவறுகளை குடும்பத்தவரிடம் சுட்டிக்காட்டுவதில் எந்த தவறும் இல்லை. அதையே போய் பக்கத்துவீட்டவரிடம் நக்கலாக கூறினால் அதை தவறு என்று ஒத்துக்கொள்கிறேன். எனக்குத்தெரிந்து யாரும் அப்படி செய்வதில்லை.

இந்தியா வாழ்க, இந்தியா வாழ்க என்று கூக்குரலிடுவதால் மட்டுமே நமது நாடு முன்னேறிவிடாது. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு தேவையானது நல்ல ஒரு direction... அந்த திசையை நோக்கி அனைவரின் ஒட்டுமொத்த கடின உழைப்புப் பயணம். அதற்கு வளர்ந்த, வளரும் பக்கத்து நாட்டவர்களுடன் நம்மை சரி பார்த்துக்கொள்ள வேண்டிய தேவை கட்டாயம் இருக்கிறது. உலமயமாக்கப்பட்ட இந்த சூழ்நிலையில் அங்கிருக்கும் சில நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.

ஒரு நாட்டின் வளர்ச்சி எங்கிருந்து தொடங்குகிறது என்றால் அது அதன் குறைகளை உணரத்தொடங்குவதிலிருந்தே. நாம் எங்கிருக்கிறோம் என்று தெரிந்தால் தான் அங்கிருந்து அடுத்த நிலையை அடைய முடியும். அதை வெவ்வேறு நாடுகளிலில் வசிக்கும் இந்தியர்கள் நல்ல கெட்ட விஷயங்களை, அவரவரது கண்ணோட்டத்தை ஆராய்ந்து அதை நமக்குள் பொதுவான அமைப்பான வலைப்பதிவில் வெளியிடுவது ஆக்கபூர்வமான ஒன்றே தவிர வேறெதுவுமில்லை.

தயவு செய்து நாட்டுப்பற்றுக்கு இது போன்ற அளவு கோல்களை வைக்காதீர்கள். அடுத்தவரின் தேசப்பற்றை தயவுசெய்து சந்தேகிக்காதீர்கள். தவறு செய்யும் தனிமனிதரை தயவுசெய்து கண்ணியமாக கண்டியுங்கள். தனி மனிதரின் கருத்துக்களை பொதுமைப்படுத்தி எல்லோரும் இப்படித்தான் என்ற முடிவுக்கு வரவேண்டாம்.