Thursday, September 29, 2005

தனி மனித சுதந்திரம்

அயல் நாட்டில் நான் பெரிதும் விரும்பும் ஒன்று 'தனிமனித சுதந்திரத்தை மதித்தல்'. சரி. தனிமனித சுதந்திரம் எந்த அளவுக்கு மதிக்கப்படுகிறது? அது அடுத்தவரின் சுதந்திரத்தை பாதிக்காதவரை...

தனி மனித சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுத்தல் சிறுவயது முதலே ஆரம்பித்து விடுகிறது. குழந்தைகள் அவர்கள் விரும்பியவற்றை தெர்ந்தெடுக்க அனுமதிப்பது, வீட்டில் அவர்களுக்கென்று தனி அறை கொடுத்து அவர்களின் தனிமையையும் தங்களுடைய தனிமைத்தேவையையும் மதிப்பது, குழந்தைகளை விரும்பிய படிப்பு படிக்க விடுவது, அவர்கள் ஒரு வயதுக்கு, தங்களை தாங்களே பார்த்துக்கொள்ளக்கூடிய வயதுக்கு வந்தபிறகு அவர்களின் பொருளாதாரத்தேவைகளை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டிய ஒரு தளத்தை ஏற்படுத்துவது என்று எல்லா இடங்களிலும் தனிமனித சுதந்திரத்தை பார்க்கலாம்.

அதேபோல் பொது இடங்களில் மக்கள் கடை பிடிக்கும் ஒழுங்கு ஆச்சரியப்படத்தக்கது. எங்கு பார்த்தாலும் வரிசையில் நிற்கும் ஒழுங்கு கூட தனிமனித சுதந்திரத்தை மதித்தலின் ஒரு பிரதிபலிப்புதான். நீ முதலில் வந்தாய் அதனால் உனக்குத்தான் முதலில் அனுமதி என்று எல்லோரும் அமைதி காத்து பொறுமையாக வரிசையில் நிற்பது என்ற ஒழுங்கெல்லாம் சிறுவயது முதலே கற்றுக்கொடுக்கப்பட்டுவிடுகிறது.

அதே போல் செய்யும் தொழிலில் ஏற்றத்தாழ்வு பாராமையும் மதிக்கத்தக்க ஒன்று. தொழிலால் யாரும் யாரையும் வேறுபடுத்துவதில்லை. சம்பள வித்தியாசமும் பெருமளவில் இருப்பதில்லை. பொருளாதாரம் இதில் பெரும்பங்கு வகித்தாலும், தனி மனிதனுடைய மனப்பான்மை இதில் முக்கியமானது.

மேலே சொன்னவை சில உதாரணங்கள் தான், ஆனால் இங்கு பார்க்கும் பெரும்பாலான நல்ல விஷயங்கள் அனைத்துக்கும் 'தனிமனித சுதந்திரத்தை மதித்தல்' தான் அடிப்படையாக இருக்கிறது. இந்தியாவில் இருந்தவரைக்கும் அவை பற்றி எதுவுமே சிந்திக்காமல் இருந்த மனது இங்கு வந்து இந்த சூழல் பழகி, இந்தமுறை விடுமுறைக்காக இந்தியாவுக்கு சென்றிருந்த போது தான் எந்த அளவிற்கு நமது சமுதாயத்தில் தனிமனித அத்துமீறல்கள் நடக்கின்றன என்பதை உணர முடிந்தது.

ஏன் இப்படி இருக்கிறோம் என்று சிந்தித்து பார்த்தால் அவையெல்லாம் நாம் வளர்ந்த, வளர்க்கப்பட்ட சூழல் அப்படி என்பதை உணர முடிகிறது. நாமும் அதையே அப்படியே இயல்பாக ஏற்றுக்கொண்டு வளர்ந்து விட்டோம் என்பதையும் உணர முடிகிறது. சரி இந்த சூழல் எப்படி மாறும் என்று என்னை நானே கேட்டுகொண்டால் அதை 'உன்னிலிருந்து ஆரம்பித்து செயல்படுத்து!!' என்று உள் மனது சொல்கிறது. அதுவும் சரி தான்....

Thursday, September 22, 2005

தமிழ் வாழ்க !!!

இகாரஸ் ப்ரகாஷின் 'தமிழ் வாழ்க' (இந்தவாரம் மட்டும் :-)) பதிவை பார்த்துவிட்டு, தூண்டப்பட்ட தமிழ்ப்பற்றால் என்னுடைய கணிணியின் மேல் பக்கத்தை திரும்பவும் தமிழில் மாற்றிப்பார்த்தேன்.


பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது.

Friday, September 16, 2005

நானும் படம் காட்டுறேன்...17th September 05

'ஊரோடு ஒத்து வாழ்' அப்படீன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க...
இதோ என் பங்குக்கு வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு தினமும் நடந்து சென்று திரும்பும்போது கண்ணில் பட்டதை எடுத்தது...

1) வீட்டிலிருந்து அலுவலத்துக்கு போகும் வழி.



2) போகும் வழியிலுள்ள ஒரு குளத்தில் அன்னம்,


3) புற்களில் பூக்கள்,


4) அருகிலுள்ள ஒடையில் அன்னப்பறவை,


5) விக்டோரியா பூங்காவின் இன்னொரு தோற்றம்,


6) நியூபரி கவுன்சிலின் தோற்றம்,



6) அலுவலகத்திலிருந்து வீட்டுக்கும் திரும்பும் வழி,


(படம் எடுத்தது Sony F828 Cybershot கேமராவில்.)

7) இது முகமூடியின் பின்னூட்டத்தை பார்த்தபின் சேர்த்தது. இந்தப்படம் Cumbria- எனப்படும் Lake district என்ற இடத்திற்கு போயிருந்த போது எடுத்தது.

Tuesday, September 13, 2005

சத்யா !!

இரண்டு நாளைக்கு முன்பு புதிய மெயில் வந்திருக்கிறதா என்பதற்காக யாகூவை திறந்த போது தான் அந்த அதிர்ச்சியான செய்தி எனக்காக காத்திருந்தது. போன வாரம் என் நண்பன் சத்யா இறந்துவிட்டான் என்று இரண்டு வரி மெயில்.. உடைந்து போய் அப்படியே திரையை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். என்ன செய்வதென்று தெரியவில்லை. அழுவதற்கும் கூட தெரியவில்லை.

நான் எனது கல்லூரியில் சேர்வதற்கு முன்னாலேயே என் நண்பன் ஒருவன் மூலம் எனக்குத்தெரிந்த ஒரே பெயர் சத்யா. இரண்டு வருடன் ஒரே வீட்டில் நாங்கள் தங்கியிருந்தோம். அவன் மறைந்துவிட்டான் என்பதற்காக சொல்லும் புகழ் மொழியல்ல.... அவனைப்போல் அருமையான மனிதனை பார்ப்பது கடினம். எல்லோரிடமும் இனிமையாகப்பழகுவான். கல்லூரியில் எல்லா துறையியிலும் அவனுக்கு நண்பர்கள் இருந்தார்கள். யாரும் கேட்காமலேயே உதவி செய்வான். அவனிடமிருந்த அந்த குணங்கள் தான் அவனை கல்லூரி மாணவர் தலைவன் தேர்தலில் அவனை வெற்றி பெற வைத்தது.

கல்லூரி முடித்தவுடன் நேராக குவைத்திற்கு சென்றான் என்று மட்டும் கேள்விப்பட்டேன். எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தோம். அவ்வப்போது நண்பர்கள் மூலம் அவனைப்பற்றிய செய்திகளை பறிமாரிக்கொள்வதோடு சரி.. மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னால், ஒருநாள் சத்யாவிற்கு குவைத்தில் உள்ள மருத்துவர் ஒருவர் தவறான மருந்தை கொடுத்ததால் அவன் உயிருக்கே ஆபத்தான நிலையில் இந்தியாவிற்கு திரும்பிவிட்டான் என்று கேள்விப்பட்டேன். கடுமையான போரட்டத்திற்குப்பின்பு உடல்நிலை சகஜ நிலைக்கு திரும்பி வந்தவுடன் சிங்கப்பூரில் வேலை கிடைத்து அங்கு ஒரு சில வருடம் வேலை செய்தான். திரும்பவும் உடல் நிலை சரியில்லாமல் போகவும், இந்தியா திரும்பிவிட்டான்.

அதற்குப்பிறகு போன வருடம் அவனுடைய கைத்தொலைபேசி எண் கிடைத்து அவனை தொடர்பு கொண்ட போது அவ்வளவு உற்சாகமாக வாழ்க்கையில் அவ்வளவு நம்பிக்கையாக பேசினான். ஒரு உடை ஏற்றுமதி தொழில் அவனது நண்பனுடன் சேர்ந்து செய்ய இருப்பதாகவும் அதற்கு ஏதாவது நான் இங்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று கேட்டான். அதுவிஷயமாக நாங்கள் பல மெயில்களைப்பறிமாறிக்கொண்டோம்.

போனவருடம் அவனிடமிடுந்து ஒரு மெயில் வந்திருந்தது. அதில் அவன் சினிமாவில் உதவி டைரக்டராக முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும், அதற்குப்பிறகு நடிகர் பொன்னம்பலம் தயாரித்து இயக்கும் ஒரு படத்திற்கு உதவி இயக்குனராக பணி புரிந்து கொண்டிருப்பதாகவும், அவனின் வாழ்க்கை லட்சியமான சினிமா இயக்குனராவதை சீக்கிரம் அடைந்து விடுவேன் என்று ஒரு நம்பிக்கையான ஒரு மெயில். அதற்குப்பிறகு எந்தவிதமான தொடர்பும் இல்லை.

இன்று கடைசியாக வந்த செய்தியின் படி இது ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்ததால் ஏற்பட்டதாம்.

மரணம் என்பது இயற்கையின் நியதியென்றாலும் இது போன்ற அகால மரணங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் தாங்கிக்கொள்ள் முடியாதவையாகவிருக்கின்றன.. எண்ணிப்பார்க்கும்போது சத்யா இறந்த செய்தி எனக்கு தெரியாமலேயே இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. எங்கோ எப்படியோ வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று என் எண்ணங்களிலாவது வாழ்ந்து கொண்டிருந்திருப்பான்.

வாழ்க்கையில் பல லட்சியங்களுடன் முன்னேறத்துடித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞனின் வாழ்க்கையை ஒரு மருத்துவர் கொடுத்த தவறான மருந்து சீரழித்து அதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கான மிகுந்த போராட்டத்திற்கிடையில் இறந்து போனதை பார்க்கும்போது வாழ்க்கையின் மீது கோபம் தான் வருகிறது.

இந்நேரத்தில் சுவாமி சுகபோதானந்தா சொன்னது ஞாபகம் வருகிறது.. 'SUCH IS THE WAY OF LIFE'

Saturday, September 10, 2005

பிரபலங்களிடம் தான் அப்படி என்ன ஈர்ப்பு !!

இப்போது தான் இந்த படத்தை ஆனந்த விகடனில் பார்க்க நேர்ந்தது.


பார்த்தவுடன் படத்தில் கவனிக்கத்தோன்றியது சுற்றியுள்ள ரசிகர்களின் முகத்தில் உள்ள பரவசம். பாருங்களேன் உங்களுக்கே தெரியும்.

எதனால் அப்படி?

-எல்லோருக்கும் தெரிந்த பிரபலமானவரை நான் நேரில் சந்தித்தேன் என்பதை எல்லோரிடமும் சொல்லிப்பெருமைப்படலாம் என்பதில் வரும் ஒரு நிமிட சந்தோஷமா?

-திரையில் பார்த்த அல்லது கேள்விப்பட்ட பிரபலத்தை ஒரு சக மனிதராக நேரில் சந்திக்கும்போது ஏற்படும் அதிர்ச்சியின் வெளிப்பாடா?

Friday, September 09, 2005

இங்கேயே !! இப்பொழுதே !! - Part 9

எப்போதாவது மனம் நிலையில்லாமல் தவிப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? ஒரு வேலை செய்து கொண்டிருக்கும் போது மனம் மற்றொன்றை நினைத்து அலை பாய்ந்து கொண்டிருக்கும். சரியென்று அந்த மற்றொரு வேலையை செய்ய ஆரம்பித்தால் வேறொன்றை நினைத்து அலை பாயும்.அப்போது அந்த கணத்தில் செய்து கொண்டிருக்கும் வேலையில் முழு கவனமும் செலுத்த முடியாமையில் மனம் தடுமாறும்...

பெரும்பாலான சமயங்களில் நமது மனத்திற்கு குரங்கு என்று பெயரிட்டு அதை அப்படியே அதன் குறைகளோடு ஏற்றுக்கொண்டு அதனுடன் வாழ பழகிவிட்டோம். (அப்படியே சக மனிதர்களையும் அவர்களுடைய குறை நிறைகளோடு ஏற்றுக்கொண்டு வாழ பழகிக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?!!!)

'இங்கே இப்போது' என்பது தான் நிஜம். 'here and now ' என்று ஒரு பெரிய தத்துவமே இருக்கிறது. அதை சரியாக புரிந்து கொண்டு எத்தனை பேர் வாழ்க்கையை சரியாக வாழ்க்கற்றுக்கொண்டிருக்கிறோம்.

சுவாமி சுகபோதானந்தா கூறியிருப்பார்.
'நேற்று என்பது வரலாறு. நாளை என்பது கணிக்க முடியாத் தெரியாதவொரு புதிர், இன்று என்பது நமக்கு கொடுக்கப்பட்ட பரிசு. அதற்காகத்தான் இதை ஆங்கிலத்தில் PRESENT என்று கூறுகிறார்கள் என்று. அது எவ்வளவு நிஜம் !!!

ஜக்கி வாசுதேவ் சொன்னது போல்,

'ஓய்வாக இருந்தபோது, வேலை கிடைக்காதா என்று ஏங்கினீர்கள். கிடைத்தவுடன் சந்தோஷத்தையெல்லாம் இழந்து, படபடப்புடன் ரத்த அழுத்த நோயை வரவழைத்துக் கொள்கிறீர்கள்! பதவி உயர்வு கிடைக்கும்வரை, அதற்காகப் போராடினீர்கள். இப்போது நிமிடத்துக்கு நிமிடம் டென்ஷன் என்கிறீர்கள். இன்னும் உயரத்துக்குப் போனால், என்ன சொல்வீர்களோ? முன்னால் நிம்மதியாக இருந்தேன். இப்போது அமைதியே போயிற்று என்பீர்களா?

'வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வசதிகளைப் பெருக்கிக்கொள்வது, செத்த கிளிக்குத் தங்கக் கூண்டு செய்து கொடுப்பது போல்!'

Friday, September 02, 2005

ரேசிசம்... ரேசிசம்...ரேசிசம்...

அயல்நாட்டு வாழ்க்கையைப்பற்றி பேசும்போது பெரும்பாலான நண்பர்கள் கேட்கும் ஒரு கேள்வி. அங்கு ரேசிஸம் இருக்கிறதா என்பது தான். அப்படி கேட்பவர்களுக்கெல்லாம் நான் சொல்லும் பதில் இது தான்.

கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு நேராக வேலைக்காக சென்ற ஊர் பெங்களூர். அழகான பூங்காக்களை நகரின் மையப்பகுதியில் கொண்ட அருமையான ஒரு ஊர். நட்புடன் பழகும் மக்கள், தட்ப வெப்ப நிலையைப்பற்றி சொல்லுவதென்றால் குளிர்பதனப்படுத்தப்பட்ட நகரம். அதனால் பல பன்னாட்டு நிறுவனங்கள்.. அதனால் நல்ல வேலை வாய்ப்பு. பெங்களூரின் மக்கள் தொகையில் பெரும்பாலோனோர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள். முக்கியமாக சொல்லக்கூடிய ஒன்று, பெரும்பாலும் நேர்மையான ஆட்டோ ஓட்டுனர்கள்.

இவ்வளவு இருந்தும் பெங்களூரில் எப்போதும் ஒரு அயல்நாட்டில் வசிக்கும் ஒரு உணர்ச்சியே எப்போதும் என் அடிமனத்தில் இருந்து வந்தது. அதுவும் நவம்பர் மாதம் வந்துவிட்டால் போதும் எங்கு பார்த்தாலும் சிவப்பு மஞ்சள் கொடி பறந்து கொண்டு இருக்கும். தனக்கென்று தனிக்கொடி உள்ள ஒரே மாநிலம் கர்நாடகா என்று தான் நினைக்கிறேன். நான் இருந்த நேரம் காவிரிப்பிரச்சினை உச்சத்தில் இருந்த நேரம். இப்போது நிலைமை வருண பகவான் தயவில் கொஞ்சம் பரவாயில்லை என்று நினைக்கிறேன்.

அதுவும் வீரப்பன் நடிகர் ராஜ்குமாரை கடத்திக்கொண்டு போனபோது நடந்த சம்பவங்களை மறக்கவே முடியாது. நான் வேலை பார்த்துக்கொண்டிருந்த அலுவலகம் பெங்களூருக்கு வெளியே 20 கி.மீ தொலைவில் இருந்தது. அதுவும் என்னுடைய யமஹா வண்டி தமிழ்நாடு registration-ல் இருந்தது. நண்பர்கள் அனைவரும் இதை வெளியே கொண்டு போனால் நீ வீடு போய் சேர முடியாது என்று சொல்லிவிட்டனர். அவர்கள் சொன்னது சரியென்று நண்பனின் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். வழியெங்கும் டயர்களை எரித்துக்கொண்டு இருந்தனர், அதனால் ஒரே புகை மூட்டம். ஒவ்வொரு இடத்திலும் வண்டியை நிறுத்தி கன்னடத்தில் பேசச்சொல்லி போக விட்டனர். அவர்கள் முகத்தில் இருந்த வெறியை இன்னும் மறக்க முடியாது. அதிலும் ஒரு சிறுவன் அவனுக்கு ஒரு பத்து வயது தான் இருக்கும் அவனெல்லாம் என்னை நிறுத்தி பேசச்சொல்லி வழிவிட்டான்.

எனக்கு சரளமாக கன்னடம் பேச வரும் என்பதால் எந்த பிரச்சினையும் இல்லாமல் வீடு சேர முடிந்தது. வீடு வந்து கண்ணாடியில் முகத்தை பார்த்தால் முகமெல்லாம் ஒரே புகைமூட்டத்தால் எற்பட்ட கரி படிந்து இருந்தது. மனமெங்கும் ஒரே புகை. இப்படியும் இந்த ஊரில் இருக்கவேண்டுமா என்ற ஒரு கேள்வி. வீட்டுக்கு வந்து தொலைக்காட்சியை போட்டால் எல்லா தமிழ் சேனல்களும் வரவில்லை. எல்லா தமிழ் சேனல்களையும் துண்டித்து விட்டனர். அப்போது எனக்கிருந்த மனநிலையை வார்த்தைகளாக்குவது கடினம்.

அதையெல்லாம் எண்ணிப்பார்க்கும்போது இங்கு இதுவரைக்கும் சந்திக்க நேர்ந்திராத ஆனால் ஆங்காங்கே கேள்விப்பட்டிருக்கின்ற ரேசிசம் ஒரு பெரிய பிரச்சினையே இல்லை என்று தான் சொல்லத்தோன்றுகிறது.

மொழியால் மனிதனை வேறுபடுத்தல், ஜாதியால் வேறுபடுத்தல், தொழிலால் வேறுபடுத்தல், பணவசதியால் வேறுபடுத்தல் என்று இவ்வளவு வேறுபாடுகள் உள்ள நமது சமுதாயத்தை எது தான் இன்னும் கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்கிறது என்பது இன்னும் ஒரு விளங்காத ஒரு புதிர்.

Thursday, September 01, 2005

அப்பத்தா கொடுத்த விளக்கு..

பொதுவாகவே எனக்கு தொலைக்காட்சிகளில் மூழ்கிக்கிடப்பது அவ்வளவாக பிடிக்காது. ஆனால் அவ்வப்போது விரும்பிப்பார்க்கும் ஒன்று antique show, பழமைப்பொருள்களை ஏலத்தில் விடுவது பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி. இந்த நாட்டில் பழமைப்பொருட்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்த்து அதிசயித்து போய் இருக்கின்றேன். அதே சமயத்தில் நமது நாட்டில் அதற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப்படாதது பார்த்து வருத்தமாகவும் இருக்கும்.

கடந்த முறை விடுமுறைக்காக ஊருக்கு போயிருந்த போது பார்த்தபோது எனது அய்யா வீட்டில் இருந்த பழைய அலங்கார மேஜையை வெளியே கொல்லைப்புரத்தில் தூக்கிப்போட்டிருந்தார்கள்.. பார்க்கவே அதிர்ச்சியாக இருந்தது. அருமையான வேலைப்பாட்டுள்ள மேஜை அது. அதைப்பார்க்கும்போது சிறுவயதில் அதன் மீது ஏறி விளையாடியது, அதில் இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியில் உயரம் பத்தாததால் எம்பிக்குதித்து முகம் பார்த்தது எல்லாம் ஞாபகம் வந்தது. அதை ஏன் வெளியே தூக்கிப்போட்டீர்கள் என்று கேட்டதற்கு, அது எதற்கு? பழசாகிவிட்டது அல்லவா? புதிது வாங்கிக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். அதை என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. உடனடியாக மரவேலை செய்பவரை அழைத்து அதை பழுது பார்க்கச்சொல்லி மெருகூட்டச்சொல்லி வீட்டிற்கு உள்ளே வைத்தோம்.

அதே போல் எனது அப்பத்தாவிடம்(அப்பாவின் அம்மா) பழைய கதைகளை கேட்டு அதை குறித்து வைத்துக்கொண்டோம். அவையெல்லாம் கேட்க எவ்வளவு இனிமையானவை தெரியுமா? ஏதாவது ஒரு கேள்வி கேட்டால் அவர் எவ்வளவு ஆர்வமாக பதில் சொல்லுகிறார் !! அவரின் பதில்களில் எவ்வளவு விஷயங்கள் தெரிய வருகின்றன!! ஏதாவது memory transfer technique இருந்தால் அவற்றையெல்லாம் அவரின் நினைவுகளில் இருந்து copy and paste பண்ணிக்கொள்ளலாம் என்று கூட ஆசையாக இருந்தது.

என் மனைவியும் அப்பத்தாவிடம் ஆசிர்வாதம் வாங்கும்போது அவரிடம் இருக்கும் ஒரு மிகப்பழமையான பொருள் ஒன்றை கொடுக்குமாறு வேண்டிக்கொண்டார். அதற்கு அப்பத்தா அவர் திருமணத்தின் போது சீராக கொண்டு போன சிறு விளக்கை கொடுத்தார். அதை கொடுக்கும்போது தான் அவர் கண்களில் எத்தனை மகிழ்ச்சி!! அதை பத்திரமாக கொண்டு வந்து பூஜையறையில் வைத்திருக்கிறோம்.

சிலவை பக்கத்தில் இருக்கும்போது அதன் அருமை நமக்கு தெரிவதில்லை.