Thursday, September 29, 2005

தனி மனித சுதந்திரம்

அயல் நாட்டில் நான் பெரிதும் விரும்பும் ஒன்று 'தனிமனித சுதந்திரத்தை மதித்தல்'. சரி. தனிமனித சுதந்திரம் எந்த அளவுக்கு மதிக்கப்படுகிறது? அது அடுத்தவரின் சுதந்திரத்தை பாதிக்காதவரை...

தனி மனித சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுத்தல் சிறுவயது முதலே ஆரம்பித்து விடுகிறது. குழந்தைகள் அவர்கள் விரும்பியவற்றை தெர்ந்தெடுக்க அனுமதிப்பது, வீட்டில் அவர்களுக்கென்று தனி அறை கொடுத்து அவர்களின் தனிமையையும் தங்களுடைய தனிமைத்தேவையையும் மதிப்பது, குழந்தைகளை விரும்பிய படிப்பு படிக்க விடுவது, அவர்கள் ஒரு வயதுக்கு, தங்களை தாங்களே பார்த்துக்கொள்ளக்கூடிய வயதுக்கு வந்தபிறகு அவர்களின் பொருளாதாரத்தேவைகளை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டிய ஒரு தளத்தை ஏற்படுத்துவது என்று எல்லா இடங்களிலும் தனிமனித சுதந்திரத்தை பார்க்கலாம்.

அதேபோல் பொது இடங்களில் மக்கள் கடை பிடிக்கும் ஒழுங்கு ஆச்சரியப்படத்தக்கது. எங்கு பார்த்தாலும் வரிசையில் நிற்கும் ஒழுங்கு கூட தனிமனித சுதந்திரத்தை மதித்தலின் ஒரு பிரதிபலிப்புதான். நீ முதலில் வந்தாய் அதனால் உனக்குத்தான் முதலில் அனுமதி என்று எல்லோரும் அமைதி காத்து பொறுமையாக வரிசையில் நிற்பது என்ற ஒழுங்கெல்லாம் சிறுவயது முதலே கற்றுக்கொடுக்கப்பட்டுவிடுகிறது.

அதே போல் செய்யும் தொழிலில் ஏற்றத்தாழ்வு பாராமையும் மதிக்கத்தக்க ஒன்று. தொழிலால் யாரும் யாரையும் வேறுபடுத்துவதில்லை. சம்பள வித்தியாசமும் பெருமளவில் இருப்பதில்லை. பொருளாதாரம் இதில் பெரும்பங்கு வகித்தாலும், தனி மனிதனுடைய மனப்பான்மை இதில் முக்கியமானது.

மேலே சொன்னவை சில உதாரணங்கள் தான், ஆனால் இங்கு பார்க்கும் பெரும்பாலான நல்ல விஷயங்கள் அனைத்துக்கும் 'தனிமனித சுதந்திரத்தை மதித்தல்' தான் அடிப்படையாக இருக்கிறது. இந்தியாவில் இருந்தவரைக்கும் அவை பற்றி எதுவுமே சிந்திக்காமல் இருந்த மனது இங்கு வந்து இந்த சூழல் பழகி, இந்தமுறை விடுமுறைக்காக இந்தியாவுக்கு சென்றிருந்த போது தான் எந்த அளவிற்கு நமது சமுதாயத்தில் தனிமனித அத்துமீறல்கள் நடக்கின்றன என்பதை உணர முடிந்தது.

ஏன் இப்படி இருக்கிறோம் என்று சிந்தித்து பார்த்தால் அவையெல்லாம் நாம் வளர்ந்த, வளர்க்கப்பட்ட சூழல் அப்படி என்பதை உணர முடிகிறது. நாமும் அதையே அப்படியே இயல்பாக ஏற்றுக்கொண்டு வளர்ந்து விட்டோம் என்பதையும் உணர முடிகிறது. சரி இந்த சூழல் எப்படி மாறும் என்று என்னை நானே கேட்டுகொண்டால் அதை 'உன்னிலிருந்து ஆரம்பித்து செயல்படுத்து!!' என்று உள் மனது சொல்கிறது. அதுவும் சரி தான்....

9 Comments:

Blogger மதுமிதா said...

வளர்ந்த, வளர்க்கப்பட்ட சூழல் என்பது மறுக்க முடியாத உண்மை சுரேஷ்.

என் எல்லை உன் மூக்கு நுனிவரை.
உன் எல்லை என் மூக்கு நுனிவரை என்பது
தடுக்க இயலாது நினைவுக்கு வருகிறது.

தனிமனித சுதந்திரம் மதித்தல்
நாகரீகமடைந்த மனிதனின் மன வெளிப்பாடு.

September 29, 2005 7:53 pm  
Blogger தமிழரங்கம் said...

"தனிமனித சுதந்திரம் எந்த அளவுக்கு மதிக்கப்படுகிறது? அது அடுத்தவரின் சுதந்திரத்தை பாதிக்காதவரை..." என்று கூறுவதில் "அடுத்தவரின் சுதந்திரத்தை பாதிக்காதவரை.." சுதந்திரம் என்றால், அது சுதந்திரமே இல்லை. அனைவருக்கும் சுதந்திரம் இருந்தால், சுதந்திரம் என்ற சொல்லுக்கு அர்த்தம் இருப்பதில்லை. சுதந்திரம் என்பது மற்றவனுக்கு மறுக்கபடும் போதுமட்டும் தான் சுதந்திரம் உயிர் வாழ்கின்றது.

பி.இரயாகரன்
29.09.2005

September 29, 2005 7:56 pm  
Blogger Suresh said...

நன்றி மதுமிதா மற்றும் இரயாகரன்.

இரயாகரன்,

நீங்கள் சொன்ன,
>>சுதந்திரம் என்பது மற்றவனுக்கு மறுக்கபடும் போதுமட்டும் தான் சுதந்திரம் உயிர் வாழ்கின்றது.
>>

தயவு செய்து இன்னும் கொஞ்சம் விளக்க முடியுமா? நன்றி.

September 29, 2005 10:31 pm  
Anonymous Anonymous said...

என்னிலிருந்து ஆரம்பித்து முயற்சித்துப் பார்த்தேன். ஒரு ஐஸ்க்ரீம் வாங்க 15 நிமிடங்கள் நின்றேன். பின்னால் வந்தவர்கள் என்னைப் பற்றி கண்டுகொள்ளாமல் வாங்கிச்சென்றார்கள். இருந்தாலும் காத்திருந்து, மற்றவர்களை மதித்து வாங்கிச்சென்ற ஐஸ்க்ரீமின் சுவை சற்று கூடுதலாகத்தான் இருந்தது.

நல்ல பதிவு சுரேஷ்.

September 30, 2005 3:27 am  
Blogger Suresh said...

நன்றி சரவ்..

>>மற்றவர்களை மதித்து வாங்கிச்சென்ற ஐஸ்க்ரீமின் சுவை சற்று கூடுதலாகத்தான் இருந்தது.>>

அழகாகச்சொன்னீர்கள்...

September 30, 2005 8:08 am  
Blogger Pot"tea" kadai said...

சகோ, மிக நன்றாகவே விளக்கியுள்ளீர்கள். ஆனால் சில நேரங்களில் என்னையும் அறியாமல் தவறுகள் நேர்ந்ததுண்டு. பணிவுடன் மன்னிப்புக் கோரி தவறைத் திருத்திக் கொண்டுள்ளேன்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில் என்பது "கசப்பான உண்மை"!

நன்றி!

September 30, 2005 11:47 am  
Blogger Suresh said...

நன்றி 'பொட்டீ கடை' சத்யா!!

இன்னொரு பதிவு போட்டு உங்கள் பதிவையும் தமிழ்மணத்தில் இணைத்து விடுங்கள்..

September 30, 2005 7:25 pm  
Blogger தமிழரங்கம் said...

நட்புடன்

சுதந்திரம், ஜனநாயகம் போன்றவை அனைவருக்கும் முரணற்ற வகையில் நிலவும் பட்சத்தில், இந்த சொல்லுக்குரிய அhத்தம் இயல்பாக இழந்துவிடும். நான் சுதந்திரமானவன் என்ற சொல்லுவதே கேலிக்குரியதாகிவிடும். எனக்கு சுதந்திரம் இல்லை என்பதும் கேலிக்குரியதே. இந்த சொல்லுக்குரிய உள்ளடக்கம் என்பது சமூக உள்ளடகத்தில் அர்த்தமற்ற ஒன்றாகிவிடும்.

அனைவருக்கும் சுதந்திரம், ஜனநாயகம் இல்லாத போது மட்டும் தான், அது சிலருக்கு இருக்கின்றது. பலருக்கு இல்லாமல் போகின்றது. ஒரு சொல்லுக்குரிய சமூகக் கருத்தோட்டம் சார்ந்த வாழ்வுமுறை என்பதும், அர்த்தம் கொண்டதாக இருப்பது என்பதும், சமூக முரண்பாட்டின் ஒரு கூறாகவே உள்ளது.

சுதந்திரம், ஜனநாயகம் இயற்கையான ஒரு பொருள் அல்ல. வாழ்வுமுறை சார்ந்த முரண்பாடுகளின் விளைவாக உள்ளது. இந்த முரண்பாடு தீர்க்கப்படும் போது இது எப்படி தோன்றியதோ, அப்படியே இல்லமல் போய்விடும். இது மனிதனின் தோற்றத்தில் இருந்த உருவான ஒன்றல்ல. மாறாக சமூகங்களின் பிளவினால் இடையில் உருவானது.

பி.இரயாகரன்
01.09.2005

October 01, 2005 7:43 am  
Blogger Suresh said...

நன்றி இரயாகரன்!!



Dubukku,

For some strange reason, your comment below has been removed from the blog..:-(

Suresh I also admired this in this country. But for somereason no one in my bus stop respects the queing policy. Only couple of ppl including me wait patiently in the queue while others just jump the queue. :)

October 03, 2005 1:47 pm  

Post a Comment

<< Home