Friday, September 02, 2005

ரேசிசம்... ரேசிசம்...ரேசிசம்...

அயல்நாட்டு வாழ்க்கையைப்பற்றி பேசும்போது பெரும்பாலான நண்பர்கள் கேட்கும் ஒரு கேள்வி. அங்கு ரேசிஸம் இருக்கிறதா என்பது தான். அப்படி கேட்பவர்களுக்கெல்லாம் நான் சொல்லும் பதில் இது தான்.

கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு நேராக வேலைக்காக சென்ற ஊர் பெங்களூர். அழகான பூங்காக்களை நகரின் மையப்பகுதியில் கொண்ட அருமையான ஒரு ஊர். நட்புடன் பழகும் மக்கள், தட்ப வெப்ப நிலையைப்பற்றி சொல்லுவதென்றால் குளிர்பதனப்படுத்தப்பட்ட நகரம். அதனால் பல பன்னாட்டு நிறுவனங்கள்.. அதனால் நல்ல வேலை வாய்ப்பு. பெங்களூரின் மக்கள் தொகையில் பெரும்பாலோனோர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள். முக்கியமாக சொல்லக்கூடிய ஒன்று, பெரும்பாலும் நேர்மையான ஆட்டோ ஓட்டுனர்கள்.

இவ்வளவு இருந்தும் பெங்களூரில் எப்போதும் ஒரு அயல்நாட்டில் வசிக்கும் ஒரு உணர்ச்சியே எப்போதும் என் அடிமனத்தில் இருந்து வந்தது. அதுவும் நவம்பர் மாதம் வந்துவிட்டால் போதும் எங்கு பார்த்தாலும் சிவப்பு மஞ்சள் கொடி பறந்து கொண்டு இருக்கும். தனக்கென்று தனிக்கொடி உள்ள ஒரே மாநிலம் கர்நாடகா என்று தான் நினைக்கிறேன். நான் இருந்த நேரம் காவிரிப்பிரச்சினை உச்சத்தில் இருந்த நேரம். இப்போது நிலைமை வருண பகவான் தயவில் கொஞ்சம் பரவாயில்லை என்று நினைக்கிறேன்.

அதுவும் வீரப்பன் நடிகர் ராஜ்குமாரை கடத்திக்கொண்டு போனபோது நடந்த சம்பவங்களை மறக்கவே முடியாது. நான் வேலை பார்த்துக்கொண்டிருந்த அலுவலகம் பெங்களூருக்கு வெளியே 20 கி.மீ தொலைவில் இருந்தது. அதுவும் என்னுடைய யமஹா வண்டி தமிழ்நாடு registration-ல் இருந்தது. நண்பர்கள் அனைவரும் இதை வெளியே கொண்டு போனால் நீ வீடு போய் சேர முடியாது என்று சொல்லிவிட்டனர். அவர்கள் சொன்னது சரியென்று நண்பனின் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். வழியெங்கும் டயர்களை எரித்துக்கொண்டு இருந்தனர், அதனால் ஒரே புகை மூட்டம். ஒவ்வொரு இடத்திலும் வண்டியை நிறுத்தி கன்னடத்தில் பேசச்சொல்லி போக விட்டனர். அவர்கள் முகத்தில் இருந்த வெறியை இன்னும் மறக்க முடியாது. அதிலும் ஒரு சிறுவன் அவனுக்கு ஒரு பத்து வயது தான் இருக்கும் அவனெல்லாம் என்னை நிறுத்தி பேசச்சொல்லி வழிவிட்டான்.

எனக்கு சரளமாக கன்னடம் பேச வரும் என்பதால் எந்த பிரச்சினையும் இல்லாமல் வீடு சேர முடிந்தது. வீடு வந்து கண்ணாடியில் முகத்தை பார்த்தால் முகமெல்லாம் ஒரே புகைமூட்டத்தால் எற்பட்ட கரி படிந்து இருந்தது. மனமெங்கும் ஒரே புகை. இப்படியும் இந்த ஊரில் இருக்கவேண்டுமா என்ற ஒரு கேள்வி. வீட்டுக்கு வந்து தொலைக்காட்சியை போட்டால் எல்லா தமிழ் சேனல்களும் வரவில்லை. எல்லா தமிழ் சேனல்களையும் துண்டித்து விட்டனர். அப்போது எனக்கிருந்த மனநிலையை வார்த்தைகளாக்குவது கடினம்.

அதையெல்லாம் எண்ணிப்பார்க்கும்போது இங்கு இதுவரைக்கும் சந்திக்க நேர்ந்திராத ஆனால் ஆங்காங்கே கேள்விப்பட்டிருக்கின்ற ரேசிசம் ஒரு பெரிய பிரச்சினையே இல்லை என்று தான் சொல்லத்தோன்றுகிறது.

மொழியால் மனிதனை வேறுபடுத்தல், ஜாதியால் வேறுபடுத்தல், தொழிலால் வேறுபடுத்தல், பணவசதியால் வேறுபடுத்தல் என்று இவ்வளவு வேறுபாடுகள் உள்ள நமது சமுதாயத்தை எது தான் இன்னும் கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்கிறது என்பது இன்னும் ஒரு விளங்காத ஒரு புதிர்.

10 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
David said...

அதையெல்லாம் எண்ணிப்பார்க்கும்போது இங்கு இதுவரைக்கும் சந்திக்க நேர்ந்திராத ஆனால் ஆங்காங்கே கேள்விப்பட்டிருக்கின்ற ரேசிசம் ஒரு பெரிய பிரச்சினையே இல்லை என்று தான் சொல்லத்தோன்றுகிறது.

மொழியால் மனிதனை வேறுபடுத்தல், ஜாதியால் வேறுபடுத்தல், தொழிலால் வேறுபடுத்தல், பணவசதியால் வேறுபடுத்தல் என்று இவ்வளவு வேறுபாடுகள் உள்ள நமது சமுதாயத்தை எது தான் இன்னும் கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்கிறது என்பது இன்னும் ஒரு விளங்காத ஒரு புதிர்.


100% correct. which????

Mookku Sundar said...

காவிரித் தகராறுக்காகவும், வீரப்ப விவகாரத்துக்கும் கல்லடிக்கும் கர்நாடகத்துக்கும், நிறவெறியால் நம்மை எப்போதும் "கீழேயே" பார்க்க விரும்பும் சில வெள்ளைக்கார மனதுகளுக்கும் வித்தியாசம் உண்டு. இரண்டாவது ரொம்ப வலிக்கும். இதுவரை ரேசிசத்தை சந்தித்து இருக்க வில்லை எனில் சந்தோஷப்படுங்கள்.

Boston Bala said...

இரண்டு வருடம் பப் டவுனில் முங்கியெழுந்திருந்தாலும், நண்பர்கள் மூலமே பெங்களூர் குறித்து இந்த மாதிரி கோர நிகழ்வுகளைக் கேள்வி பட்டிருக்கிறேன். டெல்லியில் பிரதான சாலைகளில் தாறுமாறாகக் குடித்துவிட்டு வண்டியோட்டுவது, தாதாக்கள் ஆளும் வடசென்னை என்று கேட்டு/படித்தது மட்டிலுமே நிறைய இருக்கிறது. அமெரிக்காவை விட ஐரோப்பாவில் நிறப்பிரிகை/இனப்பிரிகை அதிகம் என்றும் விவரிக்கிறார்கள்.

சமீபத்தில் பாஸ்டன் (க்ளோப் தினசரி)யில் எடுத்த கருத்து கணிப்பின் படி ஆப்பிரிக்க-அமெரிக்கர்களைப் பார்த்தவுடன் மற்றவர்கள் தன்னிச்சையாக தங்கள் பயத்தை வெளிப்படுத்தினார்களாம்.

மனக்கிலேசத்தை (விகாரம்?)வெளிப்படுத்துவதற்கான குறியிடுகளாக சிலவற்றையும் சொல்லியிருந்தார்கள்:

* தங்கள் பணப்பையைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுதல்

* கைப்பையை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுதல்

* நண்பருடனானப் பேச்சை டக்கென்று நிறுத்துதல்

* சாலையை அந்தப் பக்கமாக திடீரென்று கடந்து நடத்தல்

....

ஆப்பிரிக்க அமெரிக்கர் என்றில்லை... வேலை முடிந்து (அல்லது முடியாத) இரவொன்றில் பத்து மணிக்கு நான் தனியாக நடக்கும்போது, எதிரே வரும் ஆஜானுபாகுவான வெள்ளைக்காரனைப் பார்த்தால் கூட எனக்கு இந்த பயம் தலைதூக்கும். கனிவாக முகத்தைப் பார்த்து புன்சிரிப்போடு கடப்போம் என்று நினைத்துக் கொள்வேன். 'கண்பார்வையைத் தவிர்' என்று அவர் வேகமாக நடந்து கொண்டிருப்பார் (என்னைக் கண்டு பயந்து ;-))

'பயப்படறுகிறவர்கள்தான் வன்முறையில் இறங்குகிறார்கள்' (எங்கே படித்தேன் மறந்து போச்சு :-(

குருதிப்புனல்: 'தைரியம் என்பது பயப்படாத மாதிரி நடிக்கறது' போன்ற சில வசனங்களும் நினைவுக்கு வந்து போகிறது.

பதிவுக்கு நன்றி.

அப்படியே நேரம் கிடைக்கும் போது இதையும் படியுங்கள்:

Bangalore, Hyderabad, Chennai, Kochi and many other booming cities in the south are enticing investors and job hunters from other parts of the country

Suresh babu said...

சுந்தர், பாலா,

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி..

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
மதி கந்தசாமி (Mathy) said...

சுரேஷ்,

எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப முடியுமா?

mathygrps at ஜிமெயில்.கொம்

நன்றி சுரேஷ்.

-மதி

satya said...

Its a psychological affair i guess!
Cos i met a German tourist in Auroville 6 yrs back. she said she was very much pissed off with Village boys as they often bully her!
Here i have experienced myself in those bullying in pubs! But i smile at them and heard them saying "Hey pooftha!"

"Its always better to keep your mouth shut and keep on smiling" when you are alone!

Hmm...In bangalore, i too came across such incidents in 2002...
"Kannada naadey...." everywhere in bangalore. But in Shivaji Nagar and vivek nagar, the story is different! Kannadigas scared to enter in some streets.

Suresh babu said...

that's true Satya...