Monday, May 16, 2005

Black - உலக தரத்தில் ஒரு இந்திப்படம்.

இந்தப் படத்தை ரொம்ப நாளாகவே பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இப்போது தான் பார்க்க நேர்ந்தது.

Hellen Keller -ன் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம்.

கதை என்ன?.... ஒரு வரியில் சொல்வதானால்,

பிறவியிலேயே கண் தெரியாத, காது கேட்காத ஒரு பெண், ஒரு நல்ல ஆசிரியரின் வழிகாட்டுதலால் என்ன சாதிக்கிறாள் என்பது தான்.

இந்த படத்தை பார்ப்பதற்கு முன்பு, கண்களை மூடிக்கொண்டு ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள், கண் தெரியாமல் காது கேட்காமல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று.

ரவி கே சந்திரனின் அருமையான ஒளிப்பதிவும்,
அமிதாப், ராணி முகர்ஜி, சிறு வயது ராணி முகர்ஜி(பெயர் தெரியவில்லை)- இவர்களது அருமையான நடிப்பும்,
சஞ்சய் லீலா பன்சாலியின் எந்த வித compromise இல்லாத இயக்கமும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.
இவர்கள் அனைவருக்கும் இந்த வருடம் தேசிய விருது நிச்சயம்.

இந்த படம் சரியாக ஒடியதா என்று தெரியவில்லை.

முடிந்தால் கண்டிப்பாக பாருங்கள்.

Wednesday, May 11, 2005

சிறந்த 50 தமிழ் படங்கள்..

சில நாட்களுக்கு முன்பு அல்வாசிட்டி விஜய் அவர்கள் சிறந்த 100 உலகப்படங்களின் பட்டியலை வெளியிட்டார்.
அவைகள் ஒவ்வொன்றாக பார்க்க தொடங்கிவிட்டேன்.

எனக்கு பிடித்த சிறந்த தமிழ்படங்களின் பட்டியல் ஒன்றை வெளியிடலாம் என்று தோன்றியது.

இதோ உங்களுக்காக,

சிறந்த 50 (எந்த வரிசையிலும் இல்லை)

அஞ்சலி
கன்னத்தில் முத்தமிட்டால்
கேளடி கண்மணி
குணா
மௌன ராகம்
சேது
சிந்து பைரவி
விருமாண்டி
மகாநதி
அழகி

முதல் மரியாதை
காதல்
இதயம்
புதிய பாதை
மூன்றாம் பிறை
விடுகதை - அகத்தியன்
காதலிக்க நேரம் இல்லை
திருவிளையாடல்
தில்லானா மோகனாம்பாள்
புதுப்புது அர்த்தங்கள்

இயற்கை
காதலுக்கு மரியாதை
பதினாறு வயதினிலே
நெஞ்சம் மறப்பதில்லை
வானமே எல்லை
கல்யாண பரிசு
நாயகன்
வீடு
குட்டி
தண்ணீர் தண்ணீர்

இருவர்
ஹவுஸ் புல்
ரோஜா
கடல் பூக்கள்
இந்தியன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
முள்ளும் மலரும்
கருத்தம்மா
வேதம் புதிது
மண்வாசனை

கல்கி
மௌன கீதங்கள்
அலைபாயுதே
ஹே ராம்
இந்திரா
கோகுலத்தில் சீதை
குருதிப்புனல்
அவதாரம்
சிப்பிக்குள் முத்து
மெட்ராஸ் டு பாண்டிச்சேரி

இன்னும் நிறைய இருக்கின்றன. முடிந்தால் நினைவு படுத்துங்கள்.

Tuesday, May 10, 2005

மொட்டை மாடியில்...

என்னவோ தெரியவில்லை.

நான் சண்முகா பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது என் நண்பர், மூத்த மாணவர் ப்ரேம் ராஜ் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வந்தது.

முதிர் கன்னி,

பொன்னகைகள்
இல்லாததால்
புண்ணாகிப்போன
புன்னகைகள்.

வாரக்கடைசியில் நாங்கள் எல்லாம் மொட்டை மாடியில் உட்கார்ந்து கொண்டு பாலகுமாரனின் நாவல் பற்றியும் புதுக்கவிதை பற்றியும் பேசிக்கோண்டு கோண்டிருப்போம்.

ஒத்த அலைவரிசையுடன் சிந்திப்பவர்கள் கிடைப்பது இந்த இயந்திர வாழ்க்கையில் கடினமாகிவிட்டது.

அந்த காலம் திரும்ப வருமா?......

Monday, May 09, 2005

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் படிக்க வேண்டும்

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் படிக்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை.

யாராவது இந்தியா சென்று திரும்புவர்களிடம், எனக்கு ஒரு புத்தகம் வாங்கி வரச்சொல்ல வேண்டும் அல்லது நண்பர்களை வாங்கி அனுப்ப சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்.

சும்மா வலைமேய்ந்து கொண்டு இருந்த போது தான் 'ப்ராஜெக்ட் மதுரை' கண்ணில் பட்டது.
ஆஹா எவ்வளவு அருமையான காரியம் பண்ணியிருக்கிறார்கள். கோடி கொட்டி கொடுக்கலாம். தொல்காப்பியத்திலிருந்து, ஜெயகாந்தன் சிறுகதைகள் வரைக்கும் அனைத்தையும் pdf format -லும் வைத்திருக்கிறார்கள்.

அவசர அவசரமாக முதலில் பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் இரண்டையும் இறக்கி வைத்துள்ளேன்.

இன்னொரு பத்து நாளைக்கு வெட்டியாக வலைமேய வேண்டிய அவசியம் இல்லை.

Sunday, May 08, 2005

இங்கிலாந்தில் தேர்தல்..

எனக்கு தெரிந்த அனைத்து பிரிட்டிஷ் நண்பர்களும் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள்.
எனக்கும் மிகவும் ஆச்சரியம் தான்.

ஏனென்று கேட்கிறீர்களா?. இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து காமன்வெல்த் நாட்டு பிரஜைகளுக்கும் இங்கு ஓட்டு உரிமை உள்ளது.

சரி, ஓட்டு போடலாம். யாருக்கு போடுவது என்பதில் ஒரே குழப்பம். இருப்பது மூன்றே கட்சிகள்.

1) லேபர் - இராக் போரினால் டோனி பிளேர் மீது கோபம். ஆனால் இவரது ஆட்சியில் பொருளாதாரம் நன்றாக இருக்கிறது.
2) கன்செர்வேடிவ் - இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இங்கு இருக்கும் அனைத்து வெளி நாட்டவரையும் திருப்பி அனுப்பி விடுவார்களோ என்ற பயம்.
3) லிபரெல் டெமாக்ரேட் - மேலே இருக்கும் இருவரையும் பிடிக்காதவர்கள் இவர்களுக்கு வோட்டு போடலாம்.

இன்னோரு ஆச்சரியமான விஷயம். தேர்தல் தினத்தன்று இங்கு விடுமுறை கிடையாது.
மேடைப்பேச்சு கிடையாது. கட் அவுட் சமாச்சரங்கள் கிடையாது.

என்ன தேர்தலோ போங்கள்.

லண்டனில் சரவண பவன்.

ஆஹா !!

எவ்வளவு நாள் ஆதங்கம்.

லண்டன் வெம்பிளியில் ஆரம்பித்திருக்கிறார்கள்.

நேற்று சரவண பவனுக்கு சென்றிருந்தேன். அதே சுவை. கொஞ்சமும் மாறாமல் இருந்தது.
ரொம்ப நாள் கழித்து ரோம்பவும் அனுபவித்து சாப்பிட்டோம்.

நிஜமாகவே, காய்ந்து போய் இருக்கிறோம். எந்த ரெஸ்டாரெண்ட் போனாலும் அது பங்களாதேஷ் அல்லது பாகிஸ்தானிகள் நடத்தும் இந்திய ரெஸ்டாரெண்ட்-ஆகவே இருக்கிறது.

ஆரம்பித்தவருக்கு நன்றிகள். என்னைப்பொருத்தவரை இது ஒரு பிஸினெஸ் இல்லை. சேவை.

பாலகுமாரன்.

என்னை பாதித்த எழுத்தாளர்களில், எழுத்துக்களில் என்னை மிகவும் பாதித்தவர் திரு பாலகுமாரன் அவர்கள்.

பாலகுமாரன் அவர்கள் எழுதிய அனைத்து நாவல்களையும் படித்திருக்கிறேன்.

நான் இங்கிலாந்திற்க்கு, வந்த பிறகு நான் மிகவும் miss பண்ணுவது பாலகுமாரன் அவர்களின் நாவல்களைத்தான்.

இங்கு வலைப்பதியும், படிப்பவர்களில் பாலகுமாரன் விசிறிகள் யாரும் இருக்கிறீர்களா?

Saturday, May 07, 2005

இன்றிலிருந்து தமிழில்....

அனைவருக்கும் வணக்கம்.

தமிழில் எழுதி ரொம்ப நாள் ஆயிற்று. இந்த வலைபதிவில், நான் வசிக்கும் இங்கிலாந்து நாட்டில் என்னை பாதித்த சுவாரசியமான நிகழ்ச்சிகளை பதியலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

நான் முதன் முதலில் வாசித்த 'பத்ரி' யின் வலைப்பதிவுக்கும், தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு ஒரு பொது நுழை வாயிலை ஏற்ப்படுத்திய மற்றும் தமிழில் யுனிக்கோடு பற்றி அருமையான கட்டுரை எழுதிய சித்தூர்க்காரர் காசி அண்ணனுக்கும், அல்வா சிடியில் போட்டு தாக்கும் விஜய்க்கும், அருமையான பின்னூட்டம் எழுதும் நரேனுக்கும், மாலனுக்கும், பரபரப்பான செய்திகளை தொகுத்து வழங்கும் காஞ்சி பிலிம்சுக்கும், மீனாக்ஷ், தங்க மணி,முத்து முத்து, தேசிகன் மற்றும் அனைவருக்கும் வணக்கம், நன்றி.

இன்று முதல், வாரம் இருமுறை பதியலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

சந்திப்போம்.