Wednesday, July 27, 2005

லண்டன் வெம்ப்ளியில் ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி.

வரும் சனிக்கிழமை(30 ஜூலை) லண்டன் வெம்ப்ளி அரினாவில் ஏ ஆர் ரஹ்மானின் முப்பரிமாண(?) இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. நுழைவுச்சீட்டு மற்றும் மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக்கவும்.


உலக வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு முப்பரிமாண இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது என்கிறார்கள். பார்வையாளர்கள் அனைவருக்கும் முப்பரிமாண கண்ணாடி வேறு கொடுக்கிறார்களாம். அதற்க்கு மேல் விவரம் இல்லை.

தலேர் மெஹந்தி, ஹரிஹரன்,சங்கர் மகாதேவன், அல்கா யக்னிக், சாதனா ஸ்ர்கம் மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

Getting bit excited.....பார்த்து முடித்துவிட்டு எப்படி இருந்தது என்று எழுதுகிறேன்.

Sunday, July 24, 2005

அன்னியன்... ஒரு அன்னப்பறவை analysis

முதலில் rajni ramki, சின்னவன், kajni kamki :-)அனைவருக்கும் நன்றி...

மைனஸ் பாயிண்ட்:




பிளஸ் பாயிண்ட்ஸ்:

1. தனி மனித ஒழுக்கம் முக்கியம்.
2. அதிகாரிகளை, அரசாங்கத்தை மற்றதையும் குறை சொல்லாதீர்கள். (நீங்கள் தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் அனைத்திற்கும் பொறுப்பு)
3. பணம் கொடுத்து திரையரங்கத்தில் உட்காந்திருக்கும் படித்தவர்கள், பாமரர்கள் அனைவரையும் பொழுது போக்குப்படுத்துவது.
4. கருட புராணம் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்தியது.(அது உண்மையா?)
5. விக்ரமின் அருமையான நடிப்பு.





நூறு குறைகள் இருந்தாலும் பரவாயில்லை, ஒருசில நல்லவைகள் இருந்தால் அவை பாராட்டப்பட வேண்டியவை (copied from Mahatma Gandhi)
நல்லதைத்தான்(கொஞ்சமோ!! நிறையயோ!! இருந்தாலும்) பாராட்டி ஒரு வார்த்தை சொல்லிட்டு போறதுல என்ன கொறஞ்சுட போறதுடுங்க?????

Saturday, July 23, 2005

இந்தியாவின் அருமை அமெரிக்காவிற்கு இப்போது புரிகிறது.

கடைசியில் இந்தியா போன்ற ஒரு சமத்துவத்தை விரும்பும் நாட்டின் அருமையை அமெரிக்க ஊடகங்கள் உணரத்தொடங்கி உள்ளன.

இன்று வாஷிங்டன் டைம்ஸில் வந்துள்ள கட்டுரையின் சுட்டி.

கட்டுரையில் இருந்து சில வரிகள்,

1) இந்தியாவின் மத ஒருமைப்பாட்டுக்கு ஒரு உதாரணம், இந்தியாவின் பிரதமர் ஒரு சீக்கியர், ஜனாதிபதி ஒரு இஸ்லாமியர், ஆளும் கட்சியின் தலைவர் ஒரு கிரிஸ்துவர், அவரது பிள்ளைகள் இந்துக்கள், முன்னாள் துணை ஜனாதிபதி ஒரு தலித்.
2) உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ள நாடு இந்தோனேசியாவுக்கு அடுத்தபடி இந்தியா தான், இருந்தாலும் இந்திய இஸ்லாமியர்கள் இது வரைக்கும் எந்தவிதமான தீவிரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை.
3) நீங்களே மற்றதை படித்துக்கொள்ளுங்கள் (சில சமயங்களில் மொழி பெயர்ப்பது கருத்தை சிதைத்து விடுகிறது)

அமெரிக்காவுக்கு இப்போதாவது நம் அருமை புரிந்ததே அது வரைக்கும் மகிழ்ச்சி. (அவர்களுக்கு புரிந்து இருக்காவிட்டாலும் நமக்கு கவலை இல்லை.. அது வேறு விஷயம்)

Friday, July 22, 2005

இங்கிலாந்தில் தற்போதைய நிலவரம் - ஒரு அலசல்

லண்டனில் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பு நிகழ்சிக்கு பிறகு இங்கு நிலவரம் மற்றும் இங்கிலாந்து மக்களின் மன நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றியான என்னுடைய பதிவு.

ஒட்டு மொத்த நிலவரம்:
இரண்டு வாரத்துக்கு முன்பு, நான்கு குண்டு வெடிப்புகள், 54 பேர் பலி, நூற்றுக்கணக்கணக்கானோர் காயம். இப்போது அதேபோல் நான்கு குண்டு வெடிப்பு முயற்சிகள், அதிர்ஷ்டவசமாக முயற்சிகள் தோல்வி, தோல்வியடைந்த முயற்சிகள் காரணமாக இங்குள்ள காவல் துறையினருக்கு அதிகமான தடயங்கள். குண்டுவெடிப்பு முயற்சியில் சம்பந்தப்பட்டவனை பிடிக்கும் முயற்சியில் ஒருவன் சுட்டுக்கொலை. நிராயுத பாணியாக இருந்திருந்தும்(அதிகாரபூர்வமற்ற செய்தி). இங்கிருக்கும் இஸ்லாமியர்களுக்கு தனிமனித சுதந்திரம் மற்றும் நாளை நம்மையும் இதேபோல் சுட்டுக்கொள்ள மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்பது பற்றிய பயம்.
இது தான் இப்போதைய நிலவரம்.

லண்டனில் நிலவரம்:
லண்டனில், நான் பார்த்தவரை, நான் கேள்விப்பட்டவரை, இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்படவில்லை. இரண்டு மூன்று பாதாள ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் வசிக்கும் அனைவரும் அவரவர் தினசரி பணிகளை புரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். என்ன ஒன்று!! எல்லோரும் எல்லோரையும் ஒரு சந்தேக கண்ணோட்டத்தோடு தான் பார்த்து கொண்டு ரயிலில் மற்றும் பேருந்தில் பிரயாணிக்கிறார்கள். முடிந்தவரை சுமைகள் இல்லாமல் பிரயாணிக்கிறார்கள். லண்டனில் சுற்றுலாவினால் வரும் வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களின் பிரதிபலிப்பு:
எப்போதும் போல ஊடகங்கள் எல்லாவற்றையுமே மிகைப்படுத்திதான் பிரதிபலிக்கும்.(அவர்களுக்கு அவர்களுடைய circulation பற்றிய கவலை). அவை அனைத்தும் இஸ்லாமிய மக்களை தனிமைபடுத்துவது போலவே செய்திகளை வெளியிடுகின்றன. முதலில் தீவிரவாதி பிரிட்டிஷ் குடிமகன் என்றன, பின்பு பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பிரிட்டிஷ் குடிமகன் என்றன. இப்போது பாகிஸ்தானி என்றே குறிப்பிடுகின்றன.

டோனி ப்ளேரின் நிலை:ஒரு புறம் தொடர் தீவிரவாத குண்டுவெடிப்புகளை சமாளித்தாக வேண்டிய சூழ்நிலை. மற்றொரு புறம், ஈராக் போரினால் தான் இந்த நிலை ஏற்பட்டது என்று நிறைய பேர் குற்றம் சாட்டுகிறார்கள். சமாளித்தாக வேண்டும். சமாளித்து விடுவார். (அதுதான் அரசியல் வாதிகளுக்கு கைவந்த கலை ஆயிற்றே!)

இஸ்லாமியர்களின் மனநிலை:
யாரோ ஒரு தீவிரவாத மனப்பான்மையுடைய ஒரு கூட்டம் செய்த தவறுக்கு ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயம் ஏன் பொறுப்பேற்க வேண்டும்? அவர்கள் ஏன் தனிமைப்படுத்தப்பட வேண்டும்? - என்பது தான் அவர்களின் கேள்வி, ஆதங்கம்.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிலைப்பாடு:
நான்கு தீவிரவாதிகளில் மூன்று பேர், பாகிஸ்தானை பூர்வீகமாக கோண்டவர்கள் மற்றும் அனைவரும் பாகிஸ்தானில் உள்ள மதராஸாக்களில் இஸ்லாம் பயிலுவதற்க்காக சென்றிருந்தவர்கள் என்பதால் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு நெருக்கடி. அதிபர் முஸராப் சில அவசர சட்டங்களை இயற்றும்படி ஆயிற்று. அதே சமயத்தில் அவர் இங்கிலாந்து அரசாங்கத்துக்கு கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறார். தீவிரவாதிகள் அனைவரும் பிரிட்டிஷ் குடிமகன்கள். அதில் ஒருவன் ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்டவன். இங்கிலாந்து தீவிரவாதத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? கட்ந்த காலத்தில் எத்தனை தீவிரவாத இயக்கங்களை தடை செய்துள்ளது?....(நியாயமான கேள்வி).

இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களின் நிலை:
இங்குள்ள ஊடகங்களுக்கு இந்தியர்களோ அல்லது பாகிஸ்தானியர்களோ அல்லது பங்களாதேசிகளோ.. அனைவரும் ஏசியன்கள் தான். சில இடங்களில் சில பேர் 'பாகி' என்று தான் அனைவரையும் அழைப்பார்கள். பாகிஸ்தானிகளுக்கு எதிராக எந்த ஒரு செயல்பாடும் இங்கு வசிக்கும் இந்தியர்களையும் பாதிக்கும். ஒட்டு மொத்தத்தில் இதனால் பெரிதும் பாதிக்கப்படப்போவது நம் இந்தியர்கள் தான்.(தீவிரவாத் சம்பவங்களுக்கு எந்த வித moral responsibility-யும் இல்லையென்றாலும்..... ) ஆனால் இந்த அரசாங்கம் அந்த நிலையை ஏற்பட விடாது. நம் இந்தியர்கள் பாதிக்கப்பட்டால் இங்கு ஒட்டு மொத்த இயல்பு வாழ்க்கையே ஸ்தம்பித்து விடும். அந்த அளவுக்கு மருத்துவர்களும், பொறியியல் வல்லுனர்களும், மற்ற தொழில் துறையினரும் சமுதாயத்தில் கலந்து இருக்கிறார்கள். (மேலும் Curry food சாப்பிடாமல் இங்கிலாந்து மக்களுக்கு உயிர் வாழ முடியாது. :-)) )

இது தான் இப்போதைய ஒட்டு மொத்த நிலவரம். இதில் யாரையும் யாரும் குறை சொல்ல முடியாது. நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

பேஜ் 3

இதைப்பற்றி யாரும் எழுதியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. நேற்றுத்தான் எனக்கு இந்தப் படம் பார்க்கக்கிடைத்தது. அருமையான படம். இந்தப்படத்திற்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது கிடைத்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஒருவரியில் கதை, முன்னணி தினசரியின் மூன்றாம் பக்கத்தில் வரும் பிரபலங்களைப்பற்றிய செய்திகளை தொகுத்து வழங்கும் ஒரு நிருபர், பார்க்க நேரும் பிரபலங்களின் நிஜ ரூப வக்கிர முகங்களைப்பற்றியது.

இயக்குனருக்கு அருமையாக கதை சொல்லதெரிந்திருக்கிறது. மேல் தர வகுப்பில் உள்ள அனைத்து அவலங்களையும் கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கொங்கனா சென்னின் இதற்கு முந்திய படமான மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ் அய்யர் பார்த்திருப்பவர்களுக்கு அவருடைய நடிப்பைப்பற்றி தெரிந்து இருக்கும். மிகைப்படுத்தப்படாத இயல்பான நடிப்பு.

கலாச்சாரம் என்ற மாயை எல்லாம் மத்திய தர வகுப்பு மக்களுக்கு மட்டும் தான் என்று இந்தப்படம் பார்த்த பிறகு உறுதிப்படுகிறது.

ப்ளாக், பேஜ்3... இது போன்ற இந்திப்படங்கள் வரவேற்கத்தக்க நல்ல முயற்சிகள்.

Tuesday, July 19, 2005

தமிழ் வலைப்பதிவுகள் மட்டும் இருந்திருக்காவிட்டால்

தமிழில் வலைப்பதிவுகள் மட்டும் இல்லாவிட்டால் நான் என் நேரத்தை எப்படி செலவழித்துக்கொண்டு இருந்திருப்பேன் என்று சிந்தித்துக்கொண்டு இருந்தேன்.

முதலில், எனக்கு கிடைக்கும் நேரத்தைப்பற்றி,
1) அலுவலகத்தில் உருப்படியாக ஒரு 4 மணி நேரம் வேலை செய்தாலே ஆஹா!! ஒஹோ !! என்கிறார்கள். (வலைமேய 4 மணி நேரம் அலுவலகத்தில்)
2) 5 மணிக்கு மேல் அலுவலகத்தில் இருந்தால் உள்ளே வைத்து பூட்டி விடுவார்கள். எனவே 5 மணிக்கு அலுவலகத்தை விட்டு கிளம்பியே ஆக வேண்டும்.
3) வீட்டிலிருந்து அலுவலகம் 5 நிமிட நடையில்.(வீட்டுக்கு வந்தவுடன் மேலும் 4 மணி நேரம் கிடைக்கிறது)

மொத்தம் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வலை மேய கிடைக்கிறது. வாரக்கடைசியில் இதற்கு இன்னும் அதிகமாகவே நேரம் கிடைக்கும்.

கொஞ்சம் பின்னோக்கிப்பார்த்தால், இந்த 8 மணி நேரத்தில் பாதிக்கு மேல் தமிழ்மணத்தில் தான் செலவழிக்கிறேன் என்று தெரிகிறது.

முதலில் தமிழ்மணத்தின் முகப்பு பக்கத்தில் ஏதாவது புதிய பதிவு இருக்கிறதா என்று ஒரு பார்வை. அதில் சுவாரசியமாக எதுவும் இல்லாவிட்டால், சமீபத்தில் மறுமொழியப்பட்டவை, அதையும் படித்து முடித்தவுடன் வெறுமையாக இருக்கும்.
பிறகு, விகடன், குமுதம், தமிழோவியம், பீபீசீ, கூகிள் செய்திகள்,கூகில் மின்னஞ்சல், யாஹூ மின்னஞ்சல், மீண்டும் தமிழ்மணம், கொஞ்சம் அலுவலக வேலை, மதிய உணவு இடைவேளை, திரும்பியவுடன் மின்னஞ்சல்கள், தமிழ்மணம், புதிய பதிவுகள் எதுவும் இருந்தால் அதை முடித்துவிட்டு வேறு எதுவும் இல்லாவிட்டால் அலுவலக வேலை.

இப்படியே பொழுது போய் விடுகிறது. சிலசமயத்தில் நேரத்தை வீணடிக்கின்றேனோ என்று ஒரு கவலை ஏற்படுகிறது. இந்த நேரத்தை வேறு எதற்காகவாவது உபயோகமாக செலவழித்திருக்கலாமோ என்று சிந்தனை.

இந்த பதிவை சீக்கிரம் முடித்து விட்டு, mail check பண்ண வேண்டும், தமிழ் மணத்தில் வேறு ஏதாவது பதிவுகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நிறைய வேலை இருக்கிறது.

தமிழ் வலைப்பதிவுகள் மட்டும் இருந்திருக்காவிட்டால்!!!!!!