Tuesday, June 13, 2006

கோயில்களில் தொலைந்து போகும் மன அமைதி...

இந்த முறை இந்தியா சென்றிருந்த போது இராமேஷ்வரம் மற்றும் திருப்பதிக்கு செல்ல நேர்ந்தது. அப்போது அங்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியதன் விளைவு இந்த பதிவு.

இராமேஷ்வரம் போய் இறங்கியவுடன் guide-களின் தொல்லை ஆரம்பித்து விட்டது... வேண்டாம் என்றாலும் அவர்கள் விடுவதாக இல்லை. பின்னாலேயே துரத்தி வந்து தொல்லை. அதற்குப் பிறகு வாளிகளை வைத்துக்கொண்டு தீர்த்தம் இறைத்து ஊத்துவதற்கு ஒரு பெரிய கோஷ்டி நின்று கொண்டிருக்கும். வெளியே உள்ள கோயில் தீர்த்தக் கவுண்டரில் சீட்டு வாங்கி முறையாக சென்றால் ஒரு நாள் முழுவதும் தீர்த்தம் இறைத்து ஊற்றுபவர்களுக்காக காத்துக்கொண்டு நின்று கொண்டிருக்க வேண்டியது தான்.

இவையாவது பரவாயில்லை. உள்ளே அர்ச்சகர்கள் பண்ணும் அட்டூழியம் தாங்க முடியாது. அர்ச்சனைத் தட்டில் ரூபாய் 50 வைத்தால் தான் அர்ச்சனை பண்ணுவேன் என்று உட்கார்ந்துவிட்டார். அதை வாங்கி அவருக்கென்று ஒரு பெரிய பை ஒன்று இருக்கிறது அதில் வைத்த பின்புதான் பூஜையையே ஆரம்பிக்கின்றார். பூஜை பண்ணியவுடன் தீபாரதணைத்தட்டை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு அவர் சென்று விட்டார். அதை கொண்டு வந்து காண்பிக்கும் வேறு ஒரு அர்ச்சகர் பணம் போடச்சொல்லி வெளிப்படையாக கத்துகிறார்.

இப்போதெல்லாம் கோயில்களுக்குச்சென்றால் முன்பு இருந்தது போல் மன அமைதி கிடைப்பதில்லை. ஏதோ போருக்கு போய் திரும்பிய ஒரு அலுப்புத் தான் ஏற்படுகிறது.

இனிமேலெல்லாம் கோயில்களுக்கு சென்றால் இறைவனை தூரத்திலிருந்து தரிசித்துவிட்டு ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்து கோயிலின் அமைதியை உணர்ந்துவிட்டு, சிற்பங்களை ரசித்துவிட்டு வரலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

14 comments:

சிங்கை சிவா said...

இந்த கோவிலில் மட்டுமல்ல.. தமிழ்நாட்டுல இருக்குற எல்லா கோவில்-லயும் இதே நிலைமை தான்..

நெஞ்சகமே கோவில்..

நினைவே சுகந்தம்..

அன்பே மஞ்சனநீர்..

பூசை கொள்ள வாராய் பராபரமே..!!

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

வாங்க சுரேஷ். ரொம்ப நாளாச்சு உங்களை இங்கிட்டு பாத்து.

அது சரி. நீங்களும் இந்த "அனுபவத்தை" அடைஞ்சேச்சா. நல்லது. இதையே சில வருடங்கள் முன்னாடி சுஜாதாகிட்ட சொன்னப்போ "இனிமே கோவிலுக்குள்ள போகும்போது செருப்பையும் வெறுப்பையும் வெளில கழட்டி வச்சிட்டுப் போங்க. அதான் உங்களுக்கு நல்லது"ன்னு சொன்னார்.

அதைத்தான் நான் உங்களுக்கும் சொல்றேன். முடிஞ்சா கழட்டி வெளில வச்சிடணும். இல்லாட்டி உள்ள போகக் கூடாது. அப்படி போனோம்னா மன அமைதி கிடைக்காது.

விடிவு பிறக்கும் என்று நம்புவோமாக.

Dharan said...

பிச்சைக்காரர்கள் கோயிலுக்கு வெளியில் மட்டுமல்ல உள்ளேயும்தான்..வெளியில் அனுதாப பிச்சை ..உள்ளே ஆணவ பிச்சை...

வெளிகண்ட நாதர் said...

கோவில்கள் வணிகத்தலங்கள் ஆகிவிட்டன!

மாயவரத்தான்... said...

கவலைப்படாதீங்க. அதான் சட்டம் வந்திடிச்சில்ல.(?!) எல்லாம் சரியா ஆகிடும்.

கானா பிரபா said...

என் அனுபவமும் இதோ:

http://kanapraba.blogspot.com/2006/05/blog-post.html

துளசி கோபால் said...

என்ன அலுத்துக்கிட்டீங்க?
இப்பெல்லாம் 'நடை முறை'யே இதான்.

Suresh babu said...

சிங்கை சிவா, சுந்தர்,தரண்,வெளிகண்ட நாதர்,மாயவரத்தான், கானா பிரபா, துளசி அக்கா, தருமி சார்... அனைவருக்கும் நன்றி.

தருமி சார்,
உங்கள் பின்னூட்டம் எப்படியோ காணாமல் போய்விட்டது.

மாயவரத்தான்,
என்ன சட்டம் வந்திடுச்சு ?? புரியவில்லை.

வவ்வால் said...

கோயில்களுக்கு போனால் மன அமைதிக்கிட்டும் என்றால் எத்தனை கோயில்கள் பக்தர்களின் கடைகண் பார்வைக்கு ஏங்கிகொண்டு உள்ளது அங்கே எல்லாம் போகலாமே! இது போன்ற புகழ் பெற்ற ஆலயங்களை மட்டும் தேர்வு செய்து போனால் அப்படி தான்,திருப்பதி சென்றால் நீண்ட வரிசையில் செல்லும் கூண்டுகளில் தள்ளி 24 மணி நேரத்திற்கு மேல் அடைத்து வைக்கிறார்கள் , கற்பகிரகம் செல்லும் போது ஜருகண்டி..என்று சொல்லி தள்ளிவிடுகிறார்கள் அதைப்பற்றி எல்லாம் யாரும் பிரஸ்தாபிப்பதே இல்லை.வணிகமயகாக்கப்பட்ட பிரபலக்கோயில்கள் மீது மோகம் குறைந்தால் தான் இதெல்லாம் அடங்கும்!

//நெஞ்சகமே கோவில்..

நினைவே சுகந்தம்..

அன்பே மஞ்சனநீர்..

பூசை கொள்ள வாராய் பராபரமே..!!//

இது தான் சரி,அல்லது தீபராதனை எல்லாம் வேண்டாம் என கடவுளை தூர இருந்து சேவித்தாலும் அருள் பாலிப்பார் என நம்பிக்கை கொண்டு ஆலயங்களின் கலை நயத்தை பார்த்து வர வேண்டும்.மற்றவர்கள் மாறவில்லை எனில் நாம் தான் மற்றத்தை கொண்டுவரவேண்டும்!

Suresh babu said...

நன்றி வவ்வால்...

சுதர்சன் said...

//இனிமேலெல்லாம் கோயில்களுக்கு சென்றால் இறைவனை தூரத்திலிருந்து தரிசித்துவிட்டு ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்து கோயிலின் அமைதியை உணர்ந்துவிட்டு, சிற்பங்களை ரசித்துவிட்டு வரலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.//

இந்த முடிவை நான் எடுத்து பல வருடங்கள் ஆகின்றன. :)

வடுவூர் குமார் said...

கோயிலா?
எனக்கு 2ம் பட்சம் தான்.
முடிந்தவரை தவிர்த்துவிடுவேன்.
கடவுளையோ அமைதியையோ அங்கு எதிர்பார்த்துப்போனால் நிச்சயம் கிடைக்கும் ஏமாற்றம்.
ரொம்ப நாள் கழித்து பின்னூட்டம் இடுகிறேனா?
இப்பதானே பார்கிறேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பெரிய புகழ் பெற்ற கோவில்களில் என்றுமே நீங்கள் தேடுவது கிடைக்காது. ஆனால் சிறு கோவில்களில் அது தாராளமாகக் கிடைக்கும்; நீங்கள் தான் போகப் பிரியப்பட மாட்டீர்கள்.

துளசி கோபால் said...

ரேடியோ, டிவி இதுக்கெல்லாம் ஏஜன்ஸி எடுத்துருக்கீங்களா?