Thursday, October 20, 2005

தேசப்பற்று...

சில பதிவுகளில் சிலர் 'அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியாவை குறை கூற எந்த அருகதையும் இல்லை' என்பது போல் எழுதுவதை படிக்க வருத்தமாக இருக்கிறது.

இந்தியாவில் வசிப்பதால் மட்டுமே அல்லது இந்தியாவை புகழ்ந்து பேசுவதால் மட்டுமே ஒருவர் தேசப்பற்று மிக்க இந்தியர் ஆகிவிடமுடியாது. தேசப்பற்று என்பது உணர்வு பூர்வமான ஒன்று. அது எங்கிருந்தாலும் எங்கு வசித்தாலும் மாறாத ஒன்று. குடும்பத்தில் இருக்கும் தவறுகளை குடும்பத்தவரிடம் சுட்டிக்காட்டுவதில் எந்த தவறும் இல்லை. அதையே போய் பக்கத்துவீட்டவரிடம் நக்கலாக கூறினால் அதை தவறு என்று ஒத்துக்கொள்கிறேன். எனக்குத்தெரிந்து யாரும் அப்படி செய்வதில்லை.

இந்தியா வாழ்க, இந்தியா வாழ்க என்று கூக்குரலிடுவதால் மட்டுமே நமது நாடு முன்னேறிவிடாது. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு தேவையானது நல்ல ஒரு direction... அந்த திசையை நோக்கி அனைவரின் ஒட்டுமொத்த கடின உழைப்புப் பயணம். அதற்கு வளர்ந்த, வளரும் பக்கத்து நாட்டவர்களுடன் நம்மை சரி பார்த்துக்கொள்ள வேண்டிய தேவை கட்டாயம் இருக்கிறது. உலமயமாக்கப்பட்ட இந்த சூழ்நிலையில் அங்கிருக்கும் சில நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.

ஒரு நாட்டின் வளர்ச்சி எங்கிருந்து தொடங்குகிறது என்றால் அது அதன் குறைகளை உணரத்தொடங்குவதிலிருந்தே. நாம் எங்கிருக்கிறோம் என்று தெரிந்தால் தான் அங்கிருந்து அடுத்த நிலையை அடைய முடியும். அதை வெவ்வேறு நாடுகளிலில் வசிக்கும் இந்தியர்கள் நல்ல கெட்ட விஷயங்களை, அவரவரது கண்ணோட்டத்தை ஆராய்ந்து அதை நமக்குள் பொதுவான அமைப்பான வலைப்பதிவில் வெளியிடுவது ஆக்கபூர்வமான ஒன்றே தவிர வேறெதுவுமில்லை.

தயவு செய்து நாட்டுப்பற்றுக்கு இது போன்ற அளவு கோல்களை வைக்காதீர்கள். அடுத்தவரின் தேசப்பற்றை தயவுசெய்து சந்தேகிக்காதீர்கள். தவறு செய்யும் தனிமனிதரை தயவுசெய்து கண்ணியமாக கண்டியுங்கள். தனி மனிதரின் கருத்துக்களை பொதுமைப்படுத்தி எல்லோரும் இப்படித்தான் என்ற முடிவுக்கு வரவேண்டாம்.

5 comments:

துளசி கோபால் said...

நல்ல பதிவு.

வெளிகண்ட நாதர் said...

சொந்த தாயகத்தில் வசிக்காதோர் நாட்டுப்பற்றற்றவர் என்ற ஒரு கருத்து பரவலாகவே சிலரிடம் இருந்து வருகிறது. இது ஒரு குறுகிய மனபான்மையின் வெளிப்பாடு. மிக சரியாக சொன்னீர்கள், உலகம் உருண்டையற்று, தட்டை ஆகி வரும் இந்த 21ம் நூற்றண்டிலே, பொருளாதாரத்தில் முன்னிலை அடைந்து வரும் நாடுகளில் நமது பாரதம் இன்னும் முதன்மை வழி அடைய இது போன்று வளர்ந்த நாடுகளின் முன்னேற்ற பாதைகளை கண்டறிந்து, அதனை வழிப்படுத்தும் பங்கினை பெருமளவில் நடைபடுத்திக் கொண்டிருப்பதில், அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பங்கு முதன்மையானது. இதை நான் சொல்லவில்லை, Thomas Friedman என்கிற நியூ யார்க் பத்திரிக்கையின் காலமினிஸ்ட் தனது சமீபத்திய நாவலான "The World is Flat" என்கிற புத்தகத்தில் கூறி உள்ளார்.

இதுப் போன்ற கருத்துக்கள், படித்திருந்தும், படிப்பறிவில்லா பாமரனின் கருத்துக்கள் போலத்தான். ஆதுவும் இந்த இணயம் மற்றும் கணணி தொழில்நுட்பம் அதிகம் அறிந்து, விதண்டாவாதம் செய்துக் கொள்ளும் கூட்டமும், தாயகத்திலேயே, ஜனரஞ்சக பத்திரிக்கைக் கூட்டங்களும் தான்.

PositiveRAMA said...

//நாம் எங்கிருக்கிறோம் என்று தெரிந்தால் தான் அங்கிருந்து அடுத்த நிலையை அடைய முடியும்//
சத்தியமான வார்த்தைகள்.சுரேஷ் பாபு மிக அழுத்தமான பதிவு. எப்படியிருக்கீங்க? ரொம்ப பிசியா? நம்பிக்கை உங்கள் படைப்புகளுக்காக காத்திருக்கிறது.

பினாத்தல் சுரேஷ் said...

நல்ல பதிவு சுரேஷ்.

இந்தியாவிலேயே அமர்ந்துகொண்டு, இந்த நாடு உருப்படாது என லெக்சர் கொடுக்கும் கோடிக்கணக்கானோரும் உண்டு. வெளியே வந்தும் இந்திய நலனுக்காக பொங்கி எழுவோரும் உண்டு. இரண்டு தரப்பிலுமே பொதுமைப் படுத்தல் என்பதே பெரும் தொந்தரவு.

கேள்வி கேட்ட அனானிமோசுகளே - இந்த வாரம் அப்பாவின் செலவுக்கு காசு கொடுத்தேன் என்று ஒருவர் கூறினால் அப்பாவை வெறுப்பவர் என்று அர்த்தம் கொள்ளும் உங்கள் ஆழ்ந்த அறிவிற்கு என் ...............!

Suresh babu said...

துளசி அக்கா, வெளிகண்ட நாதர், +ராமா, சுரேஷ்,

அனைவருக்கும் நன்றி..

மேலே பதிவுக்கு சம்பந்தமில்லாமல் தனிமனித தாக்குதலில் பதிந்த பின்னூட்டங்களை நீக்கிவிட்டேன்.