Saturday, October 22, 2005

லண்டன் சுத்திப் பாக்கலாமா? - பாகம் 1

இப்போது இந்தியாவிலிருந்து லண்டனுக்கு நிறைய விமான நிறுவனங்கள் சேவையை ஆரம்பித்துள்ளன. சில விமானங்களில், மிகக்குறைந்த கட்டணத்திலேயே லண்டன் வந்து போகலாம். லண்டனில் ஹீத்ரோ, காட்விக், லூடன், லண்டன் நகர் விமான நிலையம் என்று நான்கு விமான நிலையங்கள். ஆனால் இந்தியாவிலிருந்து வரும் விமானங்கள் அனைத்தும் ஹீத்ரோ(Heathrow) விமான நிலையத்திற்கே வருகின்றன. சில விமானங்கள் காட்விக்(Gatwick) விமான நிலையத்துக்கு வருவது உண்டு.

லண்டன் சுற்றிப்பார்க்க வருவதற்கு தகுந்த காலநிலை எதுவென்று கேட்டால் கோடைகாலம் தான். குறிப்பாக ஏப்ரல் மாதத்திலிருந்து ஆகஸ்டு மாதம் வரை காலநிலை நன்றாக இருக்கும். அதிகாலை ஐந்து மணிக்கே சூரியன் உதித்து இரவு பத்து மணிவரை நன்றாக வெளிச்சமாக இருக்கும். அதனால் வருவதற்கான பயணத்தை அப்போது திட்டமிடுவது நல்லது. உடையை பொறுத்தவரை உச்ச கோடைகாலத்தில் நம்மூரில் அணியும் உடையே போதுமானது. ஆனால் உச்ச கோடைகாலத்திற்கு முன்பும் பின்புமான சமயத்தில் அணிவதற்கு குளிர்கால உடைகளை எடுத்துக்கொண்டு வருவது நல்லது.


தங்குவதற்கு நிறைய 'படுக்கை மற்றும் காலையுணவு'(B&B) வசதியுள்ள இடங்கள் குறைந்த விலைக்கே கிடைக்கின்றன. லண்டனின் மையப்பகுதியில் இருக்கும் பெரிய ரயில் நிலையம் 'விக்டோரியா ரயில் நிலையம்'. இதற்கு அருகில் B&B வசதியுள்ள இடங்கள் நிறைய இருக்கின்றன. முன்னரே reserve செய்திருக்காவிட்டாலும் விக்டோரியா ரயில் நிலையத்திற்கு வெளியே சுற்றுலா மையத்திற்கு அருகில் உள்ள counter -களில் உடனே book பண்ணிக்கொள்ளலாம். தோராயமாக ஒருவருக்கு ஒருநாளைக்கு 25 பவுண்டுகள் ஆகும். செலவுக்கென்று ஒரு நாளைக்கு குறைந்தது 75 பவுண்டுகள் என்று வைத்துக்கொள்வது நல்லது. இதில் உணவு, போக்குவரத்து, நுழைவுக்கட்டணங்கள் எல்லாம் அடங்கும்.

லண்டன் நகரத்தில் பாதாள ரயில் போக்குவரத்து போக்குவரத்து மிகவும் பிரபலமானது. 'Tube' என்று இதை சொல்லுவார்கள். இது லண்டன் நகரின் பெரும்பாலான எல்லா இடங்களையும் இணைக்கிறது. எளிதாக புரிந்து கொள்வதற்காக பல்வேறு வர்ணங்களில் ரயில் போக்குவரத்து பாதைகளை குறித்து வைத்திருக்கிறார்கள். புதிதாக வருபவர்கள் கூட எளிதில் பார்த்து புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு நன்றாக எளிமைப்படுத்தியிருக்கிறார்கள். கீழே உள்ள படத்தைப்பாருங்களேன் உங்களுக்கே புரியும்.


நகரில் பெரும்பாலும் எல்லா ரயில் நிலையங்களிலும் சுற்றுலா உதவி மையங்கள் இருக்கும். சுற்றிப்பார்க்க செல்லும்போது, அந்த இடம் எந்த ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கிறது என்று குறித்துவைத்துக்கொள்வது நல்லது. அதே போல் அந்த நாளில் எந்தெந்த இடங்கள் பார்க்கப்போகிறோம் என்பதை முன்பே தயார் செய்வது ரயில் பிரயாணத்தில் அதிக நேரத்தை வீணடிக்காமல் இருப்பதை தடுக்கும்.

முதன் முதலாக யாருடன் உதவியுடன் இல்லாமல் செல்பவர்கள் 'The Big Bus' போன்ற திறந்த மேற்புறத்துடன் நேரடி வர்ணனையுடன் கூடிய பேருந்துகளில் பயணம் செய்வது வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும். லண்டனில் முக்கியமான எல்லா இடங்கள் வழியாகவும் போய்
வருமாறு ஒரு சுற்றுப்பாதை வகுத்திருப்பார்கள். ஒருமுறை அனுமதிச்சீட்டு வாங்கினால் அது 24 மணி நேரத்துக்குள் எந்த இடத்திலும் இறங்கி ஏறிக்கொள்ளலாம். 15 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு பேருந்து வந்து போய்க்கொண்டு இருக்கும். இத்துடன் இலவசமாக ஒரு படகு சவாரிக்கான
அனுமதிச்சீட்டும் தருவார்கள்.

பாஸ்போர்ட் போன்றவற்றை பத்திரமாக வைத்துக்கொள்வது நல்லது. பயப்படும் படியாக இல்லாவிட்டாலும் சில இடங்களில் திருட்டு பயம் உண்டு. பொதுவாகவே எங்கும் வழியில் காவலர்கள் நிறுத்தி பாஸ்போர்டை காட்ட சொல்லுவதில்லை. செலவுக்கு Travellers cheque -ஆக பணத்தை மாற்றி எடுத்துக்கொண்டு வருவது நல்லது. முழுவதுமாக பவுண்டுக்கு மாற்றிவிடாமல் அன்றைய செலவுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும் மாற்றி எடுத்துக்கொண்டு வருவது நல்லது.

அடுத்த பதிவுகளில் லண்டனில் எந்தெந்த இடங்கள் முக்கியமாக பார்க்க வேண்டியவை என்பதை பார்க்கலாம். ...

5 comments:

puddhuvai said...

Dear Suresh,

This topic is very interesting, Please continue to give more detais about London. I am always interested in payana katturaigal.


Senthil Kumar

சுதர்சன் said...

ஆஹா.. எனக்கு தேவையான பதிவு. அடுத்த பகுதிகளை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். நன்றி சுரேஷ்!

தாணு said...

Heathrow airport இல் விமானம் வந்து போவது நம்மூர் செண்ட்ரல் ஸ்டேஷனில் நொடிக்கொரு டிரெயின் வந்து போவதை விட மிகச் சிறப்பாக இருக்கும்னு கேள்விப்பட்டேன். ராத்திரியில் விமானம் பறக்கக்கூடாதுன்னு ஒரு ரூல் இருக்குதாமே, அப்படியா? ட்ட்யூப் டிரெயின் படத்தைப் பார்த்தாலே தலை சுத்துதே, பயணம் பண்ண எப்படி இருக்கும்?

Suresh babu said...

நன்றி செந்தில், சுதர்சன்.

தாணு,

ஹீத்ரோவில் நிமிடத்திற்கு ஒருவிமானம் புறப்பட்டுக்கொண்டோ இறங்கிக்கொண்டோ இருக்கும். take-off-க்காக விமானங்கள் வரிசையாக நிற்பதை பார்க்க அழகாக இருக்கும். ராத்திரியில் விமானம் பறப்பதைப்பற்றி சரியாக தெரியவில்லை.. ஆனால் ஹீத்ரோ பக்கத்தில் தான் இங்கிலாந்து ராணியின் வின்சர் அரண்மணை இருக்கிறது. ராணி அரண்மணையில் இருக்கும் சமயம் மட்டும் விமானம் அதன் மேல் பறக்க கட்டுப்பாடு உள்ளது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

Suresh babu said...

தாணு,

ட்யூப் பற்றி சொல்ல மறந்து விட்டேன். படம் மேலோட்டமாக பார்க்க மட்டும் தான் குழப்பமாக இருக்கும் ஆனால் மிக தெளிவாக எளிதில் புரிந்து கொள்ளும்படி பாதைகளை வகுத்திருக்கிறார்கள்.