Tuesday, June 13, 2006

கோயில்களில் தொலைந்து போகும் மன அமைதி...

இந்த முறை இந்தியா சென்றிருந்த போது இராமேஷ்வரம் மற்றும் திருப்பதிக்கு செல்ல நேர்ந்தது. அப்போது அங்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியதன் விளைவு இந்த பதிவு.

இராமேஷ்வரம் போய் இறங்கியவுடன் guide-களின் தொல்லை ஆரம்பித்து விட்டது... வேண்டாம் என்றாலும் அவர்கள் விடுவதாக இல்லை. பின்னாலேயே துரத்தி வந்து தொல்லை. அதற்குப் பிறகு வாளிகளை வைத்துக்கொண்டு தீர்த்தம் இறைத்து ஊத்துவதற்கு ஒரு பெரிய கோஷ்டி நின்று கொண்டிருக்கும். வெளியே உள்ள கோயில் தீர்த்தக் கவுண்டரில் சீட்டு வாங்கி முறையாக சென்றால் ஒரு நாள் முழுவதும் தீர்த்தம் இறைத்து ஊற்றுபவர்களுக்காக காத்துக்கொண்டு நின்று கொண்டிருக்க வேண்டியது தான்.

இவையாவது பரவாயில்லை. உள்ளே அர்ச்சகர்கள் பண்ணும் அட்டூழியம் தாங்க முடியாது. அர்ச்சனைத் தட்டில் ரூபாய் 50 வைத்தால் தான் அர்ச்சனை பண்ணுவேன் என்று உட்கார்ந்துவிட்டார். அதை வாங்கி அவருக்கென்று ஒரு பெரிய பை ஒன்று இருக்கிறது அதில் வைத்த பின்புதான் பூஜையையே ஆரம்பிக்கின்றார். பூஜை பண்ணியவுடன் தீபாரதணைத்தட்டை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு அவர் சென்று விட்டார். அதை கொண்டு வந்து காண்பிக்கும் வேறு ஒரு அர்ச்சகர் பணம் போடச்சொல்லி வெளிப்படையாக கத்துகிறார்.

இப்போதெல்லாம் கோயில்களுக்குச்சென்றால் முன்பு இருந்தது போல் மன அமைதி கிடைப்பதில்லை. ஏதோ போருக்கு போய் திரும்பிய ஒரு அலுப்புத் தான் ஏற்படுகிறது.

இனிமேலெல்லாம் கோயில்களுக்கு சென்றால் இறைவனை தூரத்திலிருந்து தரிசித்துவிட்டு ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்து கோயிலின் அமைதியை உணர்ந்துவிட்டு, சிற்பங்களை ரசித்துவிட்டு வரலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.